சற்று முன்
Home / செய்திகள் / இரட்டைக் கொலை வழக்கு – ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை

இரட்டைக் கொலை வழக்கு – ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை

vakeesam-braking-newsஊர்காவற்றுறை – நாரந்தனை தாக்குதல் தொடர்பான மூன்று குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனையும் 20 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனையும், ஓரு லட்சம் ரூபா அபராதமும் விதித்து யாழ் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய உறுப்பினர்கள் மீது ஈ.பி.டி.பி இனர் 2001/11/28 அன்று மேற்க்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

யாழ் மேல் நிதிமன்ற நீதிபதியினால் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இவ் வழக்கின் குற்றவாளிகளாக 4 பேர் இனங்காணப்பட்டு இருந்தனர்.

குறித்த வழக்கு தொடரினர் தரப்பில் அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் மற்றும்குற்றவாளிகள் தரப்பில் சிரேஸ்ர சட்டத்தரணி றெமிடியஸ் மற்றும் சாட்சிகளை நலன் காக்கும் சட்டத்தரணியாக கே.சயந்தனும் ஆஜராகி இருந்த நிலையில், எதிரிகளாக நெப்போலியன், மதனராசா, ஜீவன் மற்றும் கருணா கர மூர்த்தி போன்றோர் விசாரணை செய்யப்பட்டனர்.

இவர்கள் நாரந்தனை சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்றும். கமல்ஸ்ரோன், ஏரம்பு பேரம்பலம் போன்றோரை கொலை செய்யதமை, 18 பேருக்கு படுகாயம் விளைவித்தமை, வாகனங்களை சேதப்படுத்தியமை போன்ற குற்றங்களுக்கு 1ஆம், 2ஆம், 3ஆம் எதிகளான நெப்போலியன், மதனராசா, ஜீவன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரட்டை மரண தண்டனையும், 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் , ஒரு லட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டதுடன், அபராதம் செலுத்த தவறின் மேலும் 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

இந் நிலையில் 4ஆம் எதிரியான கருணாகரகுரு மூர்த்தி நரந்தனை சம்பவத்தில் தொடர்புபடவில்லை எனவும் அவர் குற்றவாளி அல்ல எனவும் அவரை விடுதலை செய்யும் படியும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கின் பின்னணி.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும் ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் , மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா , ஜீவகன் என்று அழைக்கப்படும் அன்ரன் ஜீவராஜ் மற்றும் நமசிவாயம் கருணாகர மூர்த்தி ஆகிய நால்வர் கைது செய்யபட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. 47 குற்றசாட்டுக்கள் முன் வைக்கபட்டு குற்றப் பகிர்வு பத்திரம் சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்நிலையில் பிணையில் விடுவிக்கபட்டு இருந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் , மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா ,ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்கள். ஏனைய இரு சந்தேக நபர்களும் வழக்கு விசாரணைகளுக்கு சமூகம் அளித்து வந்தனர்.
அதனால் முதலாம், இரண்டாம் எதிரிகள் அற்ற நிலையில் மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் உடன் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் குறித்த வழக்கு யாழ். மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாக சட்டமா அதிபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் மன்றில் ஆஜராகவில்லை. மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர். மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி எம்.ரெமிடியஸ் ஆஜராகி இருந்தார். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந் ஆஜராகி இருந்தார்.
எதிரிகள் தம் மீதான 47 குற்ற சாட்டுக்களையும் மறுத்தனர். அத்துடன் தமக்கு ஜூரி சபை தேவையில்லை எனவும் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை நடாத்துமாறும் கூறி இருந்தனர்.
அதனை அடுத்து மன்றில் ஆஜராகாத முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கு பகிரங்க பிடிவிறாந்து மேல்நீதிபதி பிறப்பித்தார். அத்துடன் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவியை நாடுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டார்
குறித்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ம் திகதி வரை தொடர் விசாரணைகளை நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி இருந்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com