”இயக்கத்தை விட்டு ஓடியவருக்கு அதிபர் பதவியா“ – சிறிதரனை அதிபராக்கியதற்காக புலிகள் கண்டித்தனர் – அரியரத்தினம் பரபரப்பு பேட்டி

சிறிதரனுக்கு அதிபர் பதவி வழங்கியதற்காக விடுதலைப் புலிகளால் தான் கண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் இயக்கத்தில் இருந்து இடையில் விட்டுட்டுப் போன ஒராளுக்கு இந்தப் பதவி கொடுப்பதா என விடுதலைப் புலிகள் தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நன்றியுணர்வு கூட இன்றி இன்று தன் மீது சிறிதரன் அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (09) ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நான் தான் அவருக்கு முதல் முதலாக அதிபர் பதவியை வழங்கியவன். அதுகூட அவருக்கு நன்றாகத் தெரியும். நான் அவருக்கு அதிபர் பதவியை கண்டாவளை வித்தியாலயத்துக்கு வழங்கிய பொழுது விடுதலைப்புலிகள் என்னைக் கண்டித்தனர். இயக்கத்தில் இருந்து இடையில் விட்டுட்டுப் போன ஒராளுக்கு இந்தப் பதவி கொடுப்பதா என கேட்டனர். அப்பொழுது நான் அவர்களுக்கு கூறினேன். அவருக்கு ஒரு பதவி வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கினேனே ஒழிய விடுதலைப் புலிகள் என்று நான் பார்க்கவில்லை என்று. ஆகவே நான் அவருக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்திருக்கிறேன். எனக்கு அவர்மீதஎதுவித வெறுப்பும் இல்லை. ஆனால் அந்த நன்றியுணர்வு கூட இன்றி இன்று என் மீது சிறிதரன் அவதூறு பரப்பி வருவகின்றார்.
விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டுவிட்டு இடையில் வந்தவர் என்றும் பார்க்காது மீண்டும் ஆசிரியர் நியமனம் வழங்கி பின்னர் அவரை கண்டாவளை மகா வித்தியாலயத்தின் அதிபா் வெற்றிடத்திற்கு நியமித்தேன். அப்போது விடுதலைப்புலிகளின் கல்வி பிரிவு பொறுப்பாளராக இருந்த அருள்மாஸ்ரா் எனக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தாா்.
இயக்கத்திலிருந்து இடையில் வந்தவருக்கு பதவியுயர்வு வழங்கியிருகின்றீர்கள் அதுவும் தளபதி தீபன் ஊரில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலைக்கு என தெரிவித்து என் மீது கோபப்பட்டுக்கொண்டாா். நான் அப்போது அவருக்கு சொன்னது நான் இவற்றை பற்றி எதுவும் சிந்திக்கவில்ல கண்டாவளை பாடசாலையில் அதிபா் வெற்றிடம் காணப்பட்டது அதற்கு சிறிதரனை நியமித்தேன் என்றேன்.
மேலும் 1971 ஆம் ஆண்டு கல்விச் சேவைக்கு வந்த நான் 2013 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்றேன். 46 வருடங்கள் கல்விச் சேவையில் இந்த மண்ணில் பணியாற்றியிருக்கிறேன். ஆசிரியராக அதிபராக கல்விப் பணிப்பாளராக வட மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக என எனது கல்விச் சேவை காணப்பட்டது.
எனவே என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தமிழரசு கட்சியின் கிளை தீர்மானம் எடுப்பது என்பது அது தமிழரசுக் கட்சியின் தீர்மானம் அல்ல அது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தீர்மானமே இது தொடர்பில் நான் கட்சி தலைவரிடம் தெரிவிக்கவுள்ளேன்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஒன்று நன்றாக தெரியும் நான் எப்போதும் நேர்மை தவறி நடப்பவன் அல்ல என்பது. அதுதான் நான் வடக்கு மாகாண கல்வி அமைச்சராக வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாா். மாகாண சபை தேர்தல் முடிந்தவுடன் குருகுலராஜாவை கல்வி அமைச்சராக நியமிக்க வலியுறுத்த கோரி கிளிநொச்சியில் இருந்து சில அதிபா்களையும், ஆசிரியர்களையும் ஒழுங்குப்படுத்தி தமிழரசுக் கட்சியின் தலைவரையும் முதலமைச்சரையும் சந்திக்க செய்தார்.
நான் கல்வி அமைச்சராக வந்திருந்தால் தனது அரசியலுக்காக சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் கல்வி நடவடிக்கைகளில் தலையீடு செய்ய அனுமதித்திருக்க மாட்டேன். கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மிகவும் நேர்மையானவா் அவா் எப்பொழுதும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவா் அல்ல. அவா் மீது முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழு சுமத்திய எட்டு குற்றங்களும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் செய்விக்கப்பட்டதே.
வட்டக்ச்சி மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பாடசாலை அதிபருக்கு எதிராக நடந்துகொண்ட செயற்பாடு காரணமாக அப்போது கல்விப் பணிப்பாளர் கமலநாதனால் பரந்தன் மகா வித்தியாலயத்திற்கு தண்டணை இடமாற்றம் வழங்கப்பட்டவா். இவர் இன்று என் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தீர்மானித்திருக்கின்றாா். இதுவரை என்னை ஒரு தடவையேனும் அழைத்து பேசாது தன்னிச்சையாக அதிகார தனத்தோடு, செயற்படுகின்றாா்.” – என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com