சற்று முன்
Home / செய்திகள் / இன்று மாலை தீர்ப்பு ? – உச்சகட்ட பதற்றத்தில் கொழும்பு அரசியல்

இன்று மாலை தீர்ப்பு ? – உச்சகட்ட பதற்றத்தில் கொழும்பு அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மனுக்களை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்திருந்தது. நான்கு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் பலரும், கடந்த சில நாட்களாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.அவர்கள் இந்த வழக்கின் தீர்ப்பை தொகுக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாளை- வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்காலம் ஆரம்பமாகவுள்ளது. இதனால், அதற்கு முன்னர், இன்று அல்லது நாளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற தீர்ப்பு தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது வெளியாகும்வரை அனைத்து தரப்பும் காத்திருக்கின்றன.

சுருக்கமான தீர்ப்பு வரலாம்

தீர்ப்பினை தொகுக்கின்ற பணிகள் நேற்று மதியம் வரை இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும் உச்சநீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்ப்பு அதிகளவு பக்கங்களைக் கொண்டதாக இருப்பதால், நாளைக்குள் அது முழுமையாக வெளியிடப்படுவதற்கு சாத்தியங்கள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

எனவே, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் சுருக்கத்தை நாளைக்குள் அறிவிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் நோக்கிலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com