இனவாதிகள் மீது கடும் நடவடிக்கை தேவை

கிழக்கில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்டசகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் திருகோணமலை பெரிய கடை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கிழக்கின் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் விதமாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முழுப்பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

அதை கருத்திற்கு கொண்டு இந்த சம்பவம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி கிழக்கில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கும் இனவாத செயற்பாடுகளையும் முன்னெடுப்போருக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைய வேண்டும் என கிழக்கு முதல்வர் கூறினார்.

அத்துடன் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் மீதான இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் தான் கடந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மையினர் சிறந்த பாடத்தை கற்பிக்க காரணமாய் அமைந்தது என்பதை இன்றைய நல்லாட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் .

அதை விடுத்து இனவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து முஸ்லிம்களின் மதஸ்தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பாராமுகமாக இருப்பின் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கு உரிய தரப்பினரே பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று நல்லாட்சி மீது பெரும்பான்மையினரில் பெரும்பாலோனனோர் காழ்ப்புணர்வு கொண்டுள்ள நிலையில் சிறுபான்மையினரே அதன் தற்போதைய இருப்புக்கும் காரணமானவர்கள் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது.

ஆகவே இனவாத ரீதியில் குரோதத்தை வளர்க்கும் விதத்தில் செயற்படுவோர் மற்றும் மதஸ்தலங்கள் மீது தாக்குதல்களை நடத்துவோர் மீது சட்டம் கடுமையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.

எது எவ்வாறாயினும் கிழக்கிலும் மெல்ல மெல்ல இனவாத செயற்பாடுகளும் இனவாத ரீதியான வன்முறைகளும் தலைதூக்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கட்டாயக் கடமை பொலிஸாருக்கு உள்ளது.

நான் ஏற்கனவே பல தடவைகள் கூறியுள்ளேன், கிழக்கில் பாரிய இன முறுகலொன்றை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் மிக கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கில் மூன்று இனத்தவர்கள் மத்தியிலும் ஆத்திரத்தையும் பகைமையும் வளர்த்து அதனூடாக தமது சதித்திட்டத்தை சாதிப்பதற்கு குறித்த சதித்திட்டத்தை அரங்கேற்ற நினைப்பவர்கள் எண்ணுகின்றார்கள்.

அதற்கு நாம் இடமளிக்காமல் மூவின மக்களும் மேலும் ஒற்றுமையாக இருந்து எமது சகோதரத்துவத்தைக் காட்ட வேண்டிய தருணம் என்பதை நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

One comment

  1. RACISM & HATRED/VIOLENCE RUINED MANY COUNTRIES! FOOLISH ACTIONS BY SINHALA RACISTS AGAINST MINORITIES SHD BE STOPPED NOW! OTHERWISE SERIOUS CONSEQVENCES IN ECONOMY & POLITICAL STABLITY COULD RUIN SRILANKA SOON!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com