இனப்பாகுபாடற்று சகலரும் சமமாக மதிக்கும் நிலைமையை உறுதிப்படுத்தினால், மாத்திரமே, அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும்

CM-1இனங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவர் எனும், நிலைமையை பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால், மாத்திரமே, அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த சுவிட்ஸர்லாந்து நாட்டு நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகா வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார். அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இதுவரை ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் பாகுபாடுகளையே காட்டி வந்தன. கடந்த 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ஆட்சியில் நாம் சகலரும் சமமாக நடத்தப்பட்டோம். பரீட்சைகள் உள்ளிட்ட சகலவற்றிலும் நாம் சமமாக போட்டியிட்டோம். எனினும், 1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் இன ரீதியான பாகுபாடு ஆரம்பமானது. இதனையடுத்து வந்த கல்வி தரப்படுத்தல்களால் தமிழ் மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாது போனது. இவ்வாறான பாகுபாடுகள் தொடர்கின்றன. இவ்வாறான பின்னணியில் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

உண்மையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவர் என்ற நிலைமையை பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால், அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சித்திரவதைகள் தொடர்கின்றன. அதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இது இன்னமும் செய்யப்படவில்லை. நாட்டில் 17 பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான சில சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளன. முன்னரைவிட நாட்டில் நிலைமைகள் மாறியுள்ளன. தற்பொழுது ஜனநாயகம் உள்ளது. கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தபோதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்பட்டாலே தீர்வொன்று கிடைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினேன். வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாகக் காணப்படுவதாகச் கூறினேன்.

யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் உள்ளனர். இவர்கள் தற்பொழுது ஓரளவுக்கு அடக்கி வைக்கப்பட்டுள்ள போதும், அவர்கள் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பிடித்து வைத்திருப்பதுடன், அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். எழுக தமிழ் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. இதனைக் கேட்பதற்காகவே கடந்த வாரம் நாம் பேரணியை நடத்தியிருந்தோம். நாம் நடத்தியிருந்த பேரணியானது அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல. அரசியல் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக சிவில் சமூக அமைப்புக்கள் இருப்பது வழமையானது. அவ்வாறானதொரு அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டியிருந்தனர் என்பதை அவருக்கு கூறினேன்’ என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com