
இந்த மாத இறுதிக்குள் கேப்பாபிலவுக்காணிகளை விடுவிக்க வேண்டும் .அத்துடன்காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் ஆக்கபூர்வமான வழிமுறைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசை தயாரிக்க வேண்டும் என்று கோரி இலங்கை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார் இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
இந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
“ காணாமல் போனவர்களுடைய விடயம் மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்பதையும் இப்பிரச்சினைக்கான தீர்வினைக் கோரி வடக்குக் கிழக்கில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களால் பல மாதகாலமாகப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருவதையும் தாங்கள் (ஜனாதிபதி) அறிவீர்கள்.
இந்தக் குடும்பங்களில் அதிகம் பேர் தமது உறவினர்களைப் பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தவர்கள் அல்லது தமது உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்வதைக் கண்டவர்களாவார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கணிசமான தொகையினர் இளமையான குடிமக்கள் என்பதோடு அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்படாதவர்களாவர். நாட்டின் பிரசைகளாகிய, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கடுமையான மனக் காயங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கடமைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு உண்டு.எனவே, காணாமல் போனவர்களுடைய விடயங்களை அர்த்தமுள்ள வகையிலும் உரிய நோக்கங்களை அடையும் வகையிலும் கையாள்வதற்கான வழிமுறைகளை உள்ளீர்த்துச் செயற்படுத்தக்கூடிய நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
போருக்கு முன்னரும் அதன் பின்னரும் இம் மக்கள் நீண்டகாலமாக மிகுந்த துயரங்களை அனுபவித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு காணிகள் எல்லாமே அதன் உரிமையாளர்களான மக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கு அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலுவான கோரிக்கையை நான் விடுக்கிறேன். இந்த மாத இறுதிக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணிகள் யாவும் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கண்ணியமாகக் கோருகின்றேன்” -என்றுள்ளது.