இந்திய மீனவர்கள் 53 பேர் இலங்கை கடற்படையால் கைது!

புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை இலங்கையினர் கடற்படை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று(8) காலை மீனவளத்துறை அனுமதியுடன் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு சென்றனர். அவர்கள் வழக்கமாக மீன்பிடிக்கும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து இருந்தனர்.

நள்ளிரவில் அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வந்தது. அதிலிருந்த கடற்படை வீரர்கள் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளில் தாவிக் குதித்தனர். பின்னர் அந்த படகுகள் முழுவதும் சோதனை நடத்திய அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனால் நிம்மதி பெரு மூச்சுவிட்டவாறு மீனவர்கள் தொடர்ந்து அங்கு மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.

அவர்கள் அந்த இடத்தில் நகர முடியாதவாறு தடுத்தனர். துப்பாக்கிகளை கொண்டும் மிரட்டினர். மேலும் தங்கள் கடற்படை ரோந்து கப்பலில் வந்த வீரர் ஒருவரை காணவில்லை. அவரை மீனவர்கள்தான் பிடித்து வைத்திருப்பதாக கூறினர். உடனடியாக அவரை விடுவிக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் எச்சரித்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது. இலங்கை கடற்படை வீரர்களிடம் நாங்கள் இதுவரை மீன்பிடிக்க மட்டுமே இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளோம். கடற்படை வீரர்களிடம் அமைதியாக பேசியுள்ளோமே தவிர அவர்களை மிரட்டியது கூட கிடையாது. அவ்வாறு இருக்கும்போது கடற்படை வீரர் மாயமானது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த இலங்கை கடற்படையினர் 13 படகுகளில் இருந்த சுமார் 44 மீனவர்களை சிறைப்பிடித்தனர். இதற்கிடையே கடற்படையினருக்கும், புதுக்கோட்டை மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழலும் உருவானது.

நடுக்கடலில் செய்வதறியாது திகைத்த புதுக்கோட்டை மீனவர்களை கடற்படையினர் துப்பாக்கி முனையில் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவலை புதுக்கோட்டை மீனவர்கள் தங்களது வாக்கி டாக்கி மூலம் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 318, 049 ஆகிய எண்கள் கொண்ட 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் சிறைப்பிடித்த கடற்படையினர் அவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 6 படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது உயிர் தப்புவதற்காக ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கணேஷ், பாலமுருகன் ஆகிய 2 மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை 3 மணி நேரத்திற்கு பிறகு மற்ற மீனவர்கள் காப்பாற்றினர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com