இடைக்கால அறிக்கை விவாத்தின் போது கூச்சலிட்ட ஒன்றிணைந்த எதிரணி!

“வெளியேறுவதாயின் வெளியேறுங்கள். அனைவருக்கும் உரையாற்றுவதற்கு, தங்களுடைய கருத்தை இங்கே பதிவு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும். சிரேஷ்ட உறுப்பினர்கள் இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். உங்களது நடத்தை வெட்கப்பட வைக்கின்றது”

என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரைப் பார்த்து, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.  புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (31)​இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

விவாதத்தை ஆரம்பித்து வைத்து,  ஜயம்பதி விக்ரமரத்ன உரையாற்றினார். இதன்போதே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், அவருடைய உரைக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தனர்.

“புதிய அரசமைப்பில் நாடு பிளவுபடுத்தப்படப் போவதில்லை. ஒரு சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமை காரணமாக, பிரச்சினை உருவாகின்றது” என அவர் குறிப்பிட்டார்.   இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையிலிருந்து எழுந்து கூச்சலிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜயம்பதி விக்கிரமரத்னவின் உரையை தொடரவிடாமல் சத்தமிட்டார்.

இதனையடுத்து, “நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட உங்களுக்கு, இங்கே தலையீடு செய்ய முடியாது. நாடாளுமன்றத்துக்குத் தீ மூட்டவேண்டுமென்று, நீங்கள்தான் கூறியிருந்தீர்கள், யாருக்கும், இங்கே உரையாற்றும் உரிமை இருக்கிறது” என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com