இடிந்தகரையில் 5,000 மீனவர்கள் கண்டனப் பேரணி!

ஒகி புயலால் பெரும் இழப்பைச் சந்தித்த குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு கடற்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 5,000 பேர் கண்ணீர் மல்க கண்டனப் பேரணியில் பங்கேற்றனர்.

கடந்த நவம்பர் 30-ம் தேதி குமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட ஒகி புயல் காரணமாக பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் கரை சேர முடியாமல் புயலில் அடித்துச் செல்லப்பட்டனர். லட்சத்தீவு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கரை ஒதுங்கினர். இன்னும் பல மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

காணாமல் போன மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 1,013 மீனவர்களைக் காணவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குமரி மாவட்ட மீனவர்களுக்காக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தியதன் மூலமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்த இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயத்தின் முன்பிருந்து, இந்த கண்டனப் பேரணி தொடங்கியது.

ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கடலுக்குள் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், குமரி முதல் தூத்துக்குடி வரை உள்ள மீனவ பகுதிகளை ஒருங்கிணைத்து, தனி சட்ட மன்றத் தொகுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகி புயலால் கடலில் இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இந்திய கடற்படையில் வேலை வழங்க வேண்டும். புயல் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசு வழங்குவது போல 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது.

இடிந்தகரையின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற இந்த கண்டனப் பேரணி தேவாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. இதில், 5,000 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள், பெரும் துன்பத்தைச் சந்தித்துள்ள குமரி மாவட்ட மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன் கடற்படையினரின் தேடுதல் பணியானது ஆழ்கடல் பகுதிக்குள் கூடுதல் தூரத்துக்குச் சென்று தேட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com