ஆளுநர் எமக்கு உபத்திரம் தராமல் இருந்தால் போதும் – சி.வி.விக்னேஸ்வரன்

vikneswaran-womanவடக்கு மாகாண ஆளுநர் எமக்கு அனுசரணை செய்வதாகக் கூறி எமக்கு உபத்திரவம் தராமல் இருந்தால்ப் போதும்! எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதே நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் நேரடியாகப் பேச முன்வர வேண்டும். ஆளுநர் ஊடாக எம்முடன் பேச வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவர்களை நாங்கள் எம்மவர்களாகவே இப்பொழுதும் கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுநிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் ஆளுநர் வடக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களில் தலையிட்டுவரம்பு மீறி செயற்படுவ தென்பது ஏற்புடைய செயல் அல்லவெனவும் தெரிவித்துள்ளார்.

 

 

அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,

சர்வதேச கெயர் (CARE) நிறுவனத்தின் அனுசரணையுடனான
“மக்களை ஈடுபடுத்தலினூடாக கொள்கை மற்றும் நடைமுறை செயற்பாடுகளை உறுதிமிக்கதாக்குதல்”
மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் (பாண்டியன் குளம்)
24.05.2016 காலை 10.00 மணியளவில்
மாநாட்டு மண்டபம் பாண்டியன் குளம் பிரதேச செயலகம்
முதலமைச்சர் உரை
குருர் ப்ரம்மா……………………………………..
கெயர் நிறுவன அதிகாரிகளே, பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, வடமாகாண சபை உறுப்பினர் அவர்களே, வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அவர்களே, முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேச செயலர் அவர்களே, ஏனைய அதிகாரிகளே, உத்தியோகத்தர்களே!
போரினால் பாதிக்கப்பட்டு மிக நலிவுற்ற நிலையில் மக்கள் வாழும் பிரதேசங்களில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் பங்களிப்புடனான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவரும் கெயர் நிறுவனம் வடபகுதியில் உள்ள பாண்டியன்குளம் பிரதேச செயலகத்தின் வரையறைக்குட்பட்ட பகுதிகளில் வாழுகின்ற மக்களிடையே தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி நெறியொன்றினை ஆரம்பிக்கும் முகமாகவே இன்று இங்கே கூடியுள்ளோம்.
இவ் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றி அவர்களின் திட்டங்கள் தொடர்பாகவும் இப் பயிற்சிகளின் மூலம் முன்னெடுக்கப்படவிருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கக் குறிப்புக்களையும் ஏனைய தகவல்களையும் வழங்குவதற்காகவே கெயர் நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் கமனி ஹபுகல, குழு தலைவர் திரு.எம்.பிரபாகரன் ஆகியோர் இங்கே வருகை தந்திருக்கின்றார்கள். அவர்களின் விளக்கங்களை இது வரை கேட்டிருந்தோம்.

இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியன புதிய புதிய பல திட்டங்களுடன் இங்கே வருகை தந்து மத்திய அரசின் வழிகாட்டலின் கீழ் அல்லது மத்திய அரசின் அனுமதியுடன் தாம் தாம் நினைத்தவாறு பல திட்டங்களை மாகாண நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்களில் மாகாண அரசுடன் எந்தவித கலந்துரையாடல்களோ அல்லது அனுமதிகளோ இன்றி செயற்படுத்த விழைகின்றார்கள். இத் தன்மையானது மாகாண அரசின் அதிகாரங்களை புறந்தள்ளுவதாக அல்லது உதாசீனம் செய்வதாக அல்லது கவனத்திற் கொள்ளாததான ஒரு தன்மையை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. அவர்கள் நடைமுறைப்படுத்த இருக்கின்ற திட்டங்கள் எமக்கு நன்மை பயப்பனவாக இருக்கக்கூடும். ஆனால் அவை பற்றி எம்முடன் கலந்தாலோசியாது நினைத்தபாட்டில் நினைத்த நினைத்த திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் ஒரு சீரற்ற வளர்ச்சித் தன்மையை ஏற்படுத்துவதோடு மக்களைக் குழப்பக் கூடிய அல்லது தவறாக வழிநடத்தக் கூடிய நிகழ்வுகளாகவும் அவை அமைந்துவிடுகின்றன.
இதனால்த்தான் நான் பல இடங்களிலும் எனது உரையில் என்ன திட்டங்களாக இருந்தாலும் அவை எங்களுக்கு நன்மை பயப்பனவாக அல்லது எம் மக்களுக்குக் கூடுதலான பயன்பாடுகளை பெற்றுக் கொடுக்கக்கூடியனவாக இருப்பினும் உங்கள் திட்டங்கள் தொடர்பான முன்னறிவித்தல்களையும் எதிர்பார்ப்புக்களையும், அடைவு மட்டங்களையும் பற்றி எம்முடன் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வாருங்கள் என்று கூறிவருகின்றேன். உங்கள் திட்டங்கள் பயனுறுதி மிக்கவையாக காணப்படின் நாங்கள் முழுமையான ஆதரவை நல்குவோம். அத்திட்டங்கள் எமக்கு உதவாதவையாகக் காணப்படின் அது பற்றியும் உங்களுடன் பேசுவோம் என்ற கருத்தையே தெரிவித்து வருகின்றேன்.

இன்று கூட இப்பொழுது கூட இந்த நேரத்தில் கௌரவ ஆளுநர் அவர்கள் எம்முடன் கலந்தாலோசிக்காது யாழ் நகர அபிவிருத்தித் திட்டம் பற்றிக் கூட்டம் நடத்துகின்றார். அத்திட்டம் பற்றி எமது வடமாகாணசபையானது அதனோடு சம்பந்தப்பட்ட அனைவருடனுஞ் சென்ற வருடத்தில் இருந்தே பேசிவருகின்றோம். அவற்றின் பெறுபேறுகளை எங்களிடம் கேட்டு அறியாது ஆளநர் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். அவ்வாறான கூட்டத்தை நடத்தாது எம்முடன் முதலில் பேசுவதே சிறந்தது என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அது பற்றி நேற்றைய தினம் அவர் என்னுடன் பேசினார்.

கௌரவ திரு.சுமந்திரன், கௌரவ திரு.மாவை சேனாதிராஜா, கௌரவ திரு.சரவணபவன் என்போர் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்தார். அப்படியானால் அவர்களுடன் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை எமக்குத் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு வந்துள்ளேன். என்றாலும் அக்கூட்டம் கூட்டமுன்னர் அவர் எங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அதற்கு அவர் எமக்கு அனுசரணை நல்கவே தாம் அவ்வாறு செய்ததாகக் கூறுகின்றார். அனுசரணை செய்வதாகக் கூறி எமக்கு உபத்திரவம் தராமல் இருந்தால்ப் போதும்! அதே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் நேரடியாகப் பேச முன்வர வேண்டும். ஆளுநர் ஊடாக எம்முடன் பேச வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவர்களை நாங்கள் எம்மவர்களாகவே இப்பொழுதும் கருதுகின்றோம்.
சர்வதேச கெயர் நிறுவன அதிகாரிகள் எம்மைக் கடந்த 5ம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்திய போதும் அவர்களுக்கு எம்முடன் கலந்தாலோசித்து காரியங்கள் ஆற்றுவது பற்றித் தெரிவித்திருந்தேன். அவர்களும் முறையாக எமது பிரதம செயலாளருடன் சேர்ந்து எம்முடன் தொடர்பு கொண்டு தமது திட்டம் பற்றிக் கூறினார்கள்.
அந்த வகையில் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட சுருக்க பிரதியொன்றைப் பார்வையிட்டிருந்தேன். அவர்களுடைய SPACE திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கின்ற பயிற்சி நெறிகள் எமது பொது மக்களுக்கு நீண்டகால செயற்பாட்டில் நன்மை பயப்பனவாக காணப்படுகின்றமையால் இத்திட்டத்திற்கான ஒப்புதலை அளித்திருந்தேன். எனது பல வேலைப்பளுக்கள் மத்தியில் கலந்து கொள்ளவும் வந்துள்ளேன்.
சர்வதேச நிறுவனங்களும் மற்றுந் தொண்டு நிறுவனங்களும் மிகப் பெரிய நிதி ஒதுக்கீடுகளுடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இவ் வேலைத்திட்டங்களில் சில எமக்கு நன்மை பயப்பனவாக இருக்கின்ற போதிலும் பல தொடர்பற்ற திட்டங்களாகவும் காணப்படுகின்றன. அத்துடன் மிகப் பெருந் தொகையான பணத்தைத் தேவையற்ற திட்டங்களுக்காகச் செலவு செய்வதன் மூலம் மக்களுக்கோ அல்லது குறித்த நிறுவனத்துக்கோ அல்லது மாகாண அரசிற்கோ அல்லது மாகாண மக்களுக்கோ அவை பிரயோசனம் அற்றதாகிவிடுகின்றன. ஆகையால் பொருத்தமற்ற வீண்செலவீனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். அத்துடன் அவ்வாறான திட்டங்கள் அதன் பெயரைச் சொல்லி சிலர் பணக்காரர்கள் ஆகவே பயன்படுகின்றன.

சில செயற்திட்டங்களில் 80 சதவிகிதம் நிர்வாகச் செலவுகளுக்குத் திட்ட நடத்துநர்கள் செலவழிப்பதை நான் அறிய வந்துள்ளேன். அரசாங்கம் கூட எமது மக்களின் அவலங்களை முன்வைத்துப் பாரிய உதவிகளை வெளிநாடுகளில் இருந்து பெற்று வருவதை நாம் காண்கின்றோம். ஆனால் அவையாவும் எம்மக்களுக்குப் போய் அடைகின்றதா என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் பல தேவைகளைக் கொண்டவர்களாக, உடல் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அவர்களை உடல் உள ரீதியாக ஸ்திரத் தன்மை அடையக்கூடிய வகையில் அவர்களுக்கான உளவளப்படுத்தல் நிகழ்வுகள் அல்லது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இன்றைய இந்த நிகழ்வானது மக்களையும் இணைத்துக் கொண்டு அவர்களின் ஊடாக நிலையானதும் ஸ்திரத் தன்மை மிக்கதுமான கொள்கைப் பலத்தையும் நடைமுறை செயற்பாட்டு உறுதித் தன்மையையும் உருவாக்குகின்ற திட்டத்தின் ஓர் அம்சமாக அமையவிருக்கின்றது. உங்களுடைய இந்த நிறைவேற்றுத் திட்டமானது சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் நலிந்த பிரிவினர்களாக காணப்படுகின்றவர்களும் தத்தமது தேவைகளை அடையாளங் காண உதவப் போகின்றது. குறிப்பாக பெண்களையும் மற்றும் இளைஞர் யுவதிகளையும் தத்தமது தேவைகளை அடையாளம் காண வைத்து அவற்றை முன்னுரிமைப்படுத்தக்கூடிய வகையில் அதிகாரப்பங்குள்ளவர்களாக அவர்களை மாற்றி அரச இயந்திரத்தின் ஊடாக அவற்றைச் செயற்படுத்தி பயன்பெறக்கூடியவர்களாக அவர்களை மாற்ற உதவப் போகின்றது. இவ்வாறான தொனிப் பொருளிலேயே இப்பயிற்சியானது முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்று நம்புகின்றேன். அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன ஒரு நாட்டைக் கட்டி எழுப்பப் பாடுபடும் மூன்று அங்கங்களாவன. மூன்றாம் இரகத்தைச் சேர்ந்ததே கெயார் நிறுவனம். ஐக்கிய நாடுகளால் 2030ம் ஆண்டு வரையில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நிலையான அபிவிருத்திக்கான 17 இலக்குகளில் இவை மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எங்கள் சார்பில் இவைபோன்ற விடயங்களில் தேர்ச்சியும் நிபுணத்துவமும் பெற்றுள்ள எனது இணைப்புச் செயலாளர் பழனி பாலசுப்பிரமணியம் உங்களுடன் தொடர்பு கொண்டு இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்கு எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து எனது சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com