ஆலயங்களை சமூக சேவைகளைச் செய்கின்ற இடமாக மாற்றுங்கள் – சீ.யோகேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு

கோயில்களைக் கட்டுவதில் காட்டுகின்ற அக்கறை விட எமது சமயத்தினை வளர்ப்பதில் காட்டுகிற அக்கறை குறைவாக இருக்கிறது. ஆலயத்தை நல்ல ஆன்மீகக் கூடமாக மாற்றுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு சமூக சேவை செய்கின்ற இடமாக ஆலயங்களை மாற்ற வேண்டும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்து கலாச்சார திணைக்களம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 73 இந்து ஆலயங்களுக்கு 11 மில்லியன் ரூபாவை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாச்சார நிலையத்தில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி பி.சுரேஸ் தலைமையில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இந் நிகழ்வில், அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீ.யோகேஸ்வரன்,

ஆலய தர்மகத்தாக்கல் ஆலயம் சிறிதாக இருந்தாலும் ஆன்மீகம் பெரிதாக இருத்தல் வேண்டும். கோயில்களைக் கட்டுவதில் காட்டுகின்ற அக்கறை விட எமது சமயத்தினை வளர்ப்பதில் காட்டுகிற அக்கறை குறைவாக இருக்கிறது. அந்த ஊருக்கு ஆலயம்தான் மிக முக்கியமானது, அதன் தர்மகர்த்தா தான் ஊரின் தலைவன்.

அந்தச் சமயத்தினை மட்டுமல்ல மக்களையும் சமுதாயத்தையும் வழிப்படுத்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. ஆகவே ஆலய தர்மகர்த்தாக்கள் கவனத்தில் எடுத்தல் வேண்டும். கிடைக்கின்ற நிதி குறைவாக இருந்தாலும் இயன்றளவுக்குத்திருத்திக் கொண்டு பக்தியை பெருக்குங்கள். எங்களது சமயத்தைக் கூட பிழையாகக் கூறி மத மாற்றம் செய்யாதளவுக்கு நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

ஆகவே உங்களது கடமை ஆலயத்தின் ஆன்மீகத்தைக் காப்பது. ஆலயத்தை நல்ல ஆன்மீகக் கூடமாக மாற்றுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு சமூக சேவை செய்கின்ற நல்ல விடயங்களைக் கையாளுகின்ற இடமாக ஆலயங்களை மாற்ற வேண்டும்.

ஆலயங்களுக்கு பரிபாலன சபை என்பதனை மாற்றி தர்மகர்த்தா என்ற பெயரைக் கொண்டு வரவேண்டும். பரிபாலன சபையினர் கும்பாபிசேகம் செய்வது ஏனை கிரித்தியங்களைச் செய்வது அதனோடே நிறுத்தி விடுகிறார்கள். தர்மகர்த்தா என்பதும் மத விடயங்களை விடவும் ஆன்மீகம் சார்ந்தும் சமூக விடயங்கள் சார்ந்தும் கிராமங்கள் சார்ந்தும் பெரியளவுகளில் செயற்படுபவராகவும் வழிநடத்துவர்களாகவும் இருப்பார் என்றார்.

இதில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே.விமலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ். சிறிநேசன், எஸ் வியாழேந்திரன், கே. கோடீஸ்வரன், இந்து திணைக்கள பணிப்பாளர் உமாமகேஸ்வரன், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் என்.அன்னலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலய தலைவர்களிடம் நிதிக்கான காசோலைகளைக் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com