ஆர்ப்பாட்டத்திற்கு வந்தால் தான் வீடு – ரஜனி ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்காய் நடந்த ஆள்பிடி வியாபாரம்

ஈழத்துக் கலைஞா்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலாினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நல்லூாில் ஆா்ப்பாட்டம் ஒன்று இன்று(27) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பிரபல தென்னிந்திய நடிகா் சூப்பர் ஸ்ராா் ரஜனிகாந் எதிா்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த நிலையில் தென்னிந்திய அரசியல்வாதிகளின் கடும் எதிா்ப்பின் காரணமாக ரஜனிகாந்தின் வரவு அவராலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தொிவித்தே மேற்படி ஆா்ப்பாட்டக்காரா்களால் இந்த ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது. “திருமாவளவன், வேல்முருகனை கண்டித்து மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்” என்ற தலைப்பில் மேற்படி ஆா்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு வவுனியாவின் பூந்தோட்டம் மற்றும் யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறைப் பகுதிகளில் இருந்து மக்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு அழைத்துவரப்பட்டதாக தெரியவருகின்றது.

குறித்த போராட்டத்தில் ஆட்பிடி வேலைகளில் இந்திய ஆரதவுடைய யாழ் அரசியற் கட்சி ஒன்று பின்னணியில் செயற்பட்டதாகவும் தலைக்கு ஆயிரம் ரூபாவரை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதோடு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்கப்பட்ட மக்களிற்கு உணவுப்பொட்டலங்கள் மற்றும் தண்ணீர்ப் போத்தல்கள் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டளர்களால் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா பூந்தோட்டத்திலிருந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த மிகு வயது முதிர்ந்த அன்னைகள் சிலர் தமக்கு ஆர்ப்பாட்டம் எனத் தெரியது எனவும் யாழ்ப்பாணத்தில் வைத்து தமக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கு வருமாறு சிலர் தம்மை பேருந்துகளில் ஏற்றி அழைத்துவந்ததாக தெரிவித்துள்ளனர். வேறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால்தான் வீடுகள் கிடைக்கும் என தம்மை மிரட்டி அழைத்துவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பதாதைகள் பல மிக மோசமான எழுததுப் பிழைகளுடன் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்திற்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஈழத்து கலைஞர்கள் சார்ந்த பல்வேறு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com