சற்று முன்
Home / செய்திகள் / ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க ஐ.தே.கவே காரணம்..

ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க ஐ.தே.கவே காரணம்..

பிரபாகரனை யார் தோற்றுவித்தார்கள்? ஆயுதப் போராட்டம் தோன்ற காரணம் என்ன? இதற்கான காரணம் எல்லாமே ஐக்கிய தேசியக் கட்சிக்குள்தான் அடங்கியுள்ளது. இதே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அன்று யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். எண்பத்து மூன்றிலே மிகப்பெரும் இனப்படு கொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

அபிவிருத்தி என்பது எமது இனத்துக்கான விடிவினைத் தந்து விடாது, ஆனால் அதுவும் தேவை. இதற்கும் அப்பால் நாம் தொடர்ந்தும் இன விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

வரணி இடைக்குறிச்சி மேற்கு நவா சனசமூக நிலையத்தில் கம்பெரலிய நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற அபிவிருத்தி பணிகளை நேற்று திறந்து வைத்த பின்னர், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி சம்மந்தமான விடயங்களில் நாங்கள் எல்லாரும் எல்லா விசயங்களையும் கதைக்கிறோம். ஆனால் எங்களது பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா? சுதந்திரமான வாழ்க்கை வாழ்கிறோமா? நாங்கள் எல்லாரும் நின்மதியாக இருக்கிறோமா? எம்மைச் சுற்றி யார் இருக்கிறார்கள்? ஏனையவர்கள் என்ன கதைக்கிறார்கள்? இதைப் பற்றி யாரும் சிந்திக்கிறது இல்லை இப்போது.

ஏன் போரட்டம் நடந்தது? எத்தனை பேர் இரத்தம் சிந்தினார்கள், எத்தனை மாவீரர்களை இழந்திருக்கிறோம்? எத்தனை பேர் தங்களை இந்தப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தார்கள்? இவ்வாறு எல்லாம் நாம் கடந்து வந்திருக்கிறோம். இப்பொழுது எமது மனங்களில் இருந்து மெல்ல மெல்ல எமது உரிமைகள் தூக்கி எறியப்பட்டுக் கொண்டே போகிறது.

நாங்கள் இப்போது சின்னச் சின்ன குழுக்களாக, சின்னச் சின்ன சமூகங்களா வேறுபட்டுப் போய் இருக்கிறோம், அதனை அரசாங்கமோ, பேரினவாதிகளோ திட்டமிட்டுச் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் பலமாக ஒற்றுமையாக நாங்கள் எல்லோரும் நின்றால் அவர்களால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது.
எங்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எல்லாம் மாறி மாறி வந்த தேசியக் கட்சிகள் எல்லாம் எங்களது இனத்தின் மீது சவாரி விடுவதிலேயே கவனம் செலுத்துகிறார்களே ஒழிய எமது பிரச்சினையைத் தீர்த்து தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி வழங்குவதில் அவர்கள் எந்த கரிசனையும் கொண்டிருக்கவில்லை.

எங்களுக்கு என்று ஒரு சுயாட்சி இருந்திருந்தால், நாங்கள் சுதந்திரமாக வாழுகிற உரிமையை கொண்டிருந்தால், 2005ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கொடுத்திருந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையைக் கூட இந்த அரசாங்கம் வழங்கியிருந்தால் இன்று இந்த வீதிகள் எல்லாம் காபெற் வீதிகளாக இருந்திருக்கும்.

எமது உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு பறந்திருக்கும் யாருக்காகவும் காத்திருக்க வேண்டி இருந்திருக்காது. வீதிகளைத் திருத்த முடியாமல் பாடசாலைகளை வளப்படுத்த முடியாமல் நாங்கள் நிதிளைத் தேட முடியாமல் திணறுகிறோம், இதற்காகத்தான் நாங்கள் போரடினோம்.

இப்போது தென்னிலங்கையிலே யார் வேட்ப்பாளர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் தமிழர்களின் நாடி பிடிக்கிறார்கள். கோத்தபாய கேட்கிறாரா அல்லது சஜித் கோட்கிறாரா இன்று காலையில் இருந்து ரணில் விக்கிரமசிங்க கேட்கிறாரா ஜே.வி.பியின் அனுரக்குமார திஸநாயக்க கேட்கிறார என்பதல்ல அவர்களின் பிரச்சினை.

அவர்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதனைப் பார்கிறார்கள். தென் பகுதி சிங்கள மக்களது வாக்குகள் சமனாகப் பகிரப்படும், சமனாகப் பகிரப்படும், வாக்குகள் சமமாகப் பகிரப்பட்டால் 51 வீதம் பெரும் பான்மை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் இருக்கப் போகிறார்கள், தமிழர்களுடை வாக்குகளை வசீகரிப்பதற்காக பல்வேறுபட்ட தரப்புக்களை அனுப்புகிறார்கள்.

நேற்று முன்தினம் கூட குருநாகல் மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸவை வரவேற்கும் நிகழ்வில், இந் நாட்டின் டிஜ்ஜிடல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேன சிங்க குறிப்பிட்டிருக்கிறார் இந்த நாடடிலே ஐ.தே.கட்சியை அழித்தது, தலைவர் பிரபாகரனுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தான் பெரிய பங்கிருக்கிறது என்று.

நான் கேட்கிறேன், சுஜீவ சேனசிங்கவுக்கு அரசியல் அறிவு காணாது. அவர் எங்கே அரசியல் படித்தார் என்று தெரியாது. அவர் இப்ப தான் அரசியலுக்கு வந்திருக்கிறார், அவர் முதலில் அரசியல் படிக்க வேண்டும்.

இந்த நாட்டில் முதலில் அகிம்சை ரீதியாகத்தான் தமிழர்கள் போராடினார்கள். காலி முகத்திடலில் அமிர்தலிங்கத்தின் மண்டையை அடித்து உடைத்தவர்கள் சிங்களக் காடையர்கள், தந்தை செல்வா அறவழியிலே போராடிய போது அவரை காயப்படுத்தி உதாசீனம் செய்ததும் சிங்களக் காடையர்கள்தான்.

இதே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அன்று யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். இந்த சுஜீவ சேனசிங்கவின் பாட்டன், பேரன், தகப்பனார்கள் தான் இந்த நூலகத்தை கொழுத்தினார்கள். சுஜீவ சேனசிங்கவின் பாட்டன், பேரன், தகப்பனார்கள் தான் எமது மண்ணிலே மக்களை கொலை செய்தார்கள். எண்பத்து மூன்றிலே மிகப்பெரும் இனப்படு கொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படுகின்ற போதெல்லாம் இந்த மக்களை அழித்தொழிப்பதிலும் மூடி மறைப்பதிலும் கூடிய பங்கெடுத்தார்கள். இப் பொழு தங்களுக்கு ஒரு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, அல்லது தங்களுக்குள்ளே உள்ள உட் கட்சிப் பூசலை மூடி மறைக்கத் தெரியாமல், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் உள்ள உள்ளக முரண்டுகளை தீர்க்க முடியாமல், எதிர் காலத்திலே தாங்கள் ஒரு கபிநற் அமைச்சராக வரவேண்டும் என்கிற கனவோடு இருக்கின்ற சுஜீவ சேனசிங்க போன்றவர்கள் பாவிக்கிற பொருள் தான் இனவாதம்.

இந்த இனவாதம் எப்படிப் பாவிக்கிறார்கள் என்றால் தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகள் தங்களை அழித்தார்கள் என்று, பிரபாகரனை யார் தோற்றுவித்தார்கள்? இதற்கான காரணம் என்ன? இதற்கான காரணம் எல்லாமே ஐக்கிய தேசியக் கட்சிக்குள்த்தான் அடங்கியுள்ளது.

இதற்கொல்லாம் காரணம் அவர்கள் தான், ஆணைப் பெண்ணாகவும் பெண்னை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றதெல்லாவற்றையும் செய்வேன் என்று இலங்கையிலே நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடைய வாரிசுகள் தான் இவர்கள்.

ஆகவே எமது இனம் அழிக்கப்பட பொழுது, எமது இனம் வாழ முடியாது என்ற போது தான் எங்களது இளைஞர்கள் துப்பாக்கி தூக்க வேண்டிய அல்லது துப்பாக்கி பற்றிய சிந்திக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது.

இவர் குறிப்பிடுவது போல அவர்களது தலைவர்களை அழிக்க வேண்டிய நோக்கமோ அல்லது அதற்கான தேவையோ எமக்கு இருக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்களது பிரச்சினையை தீர்ப்பதற்காக போராடினோம், அறவழியிலும் அகிம்சை வழியிலும் நாங்கள் போராடிய பொழுது நாங்கள் அழிக்கப்பட்டோம், தாக்கப்பட்டோம், கொல்லப்பட்டோம் நாங்கள இன ரீதியாக் படுகொலை செய்யப்பட்டோம்.

ஆகவே தான் நாங்கள் துப்பாக்கிகளுக்குள் புகுந்து கொள்ள வேண்டிய அல்லது துப்பாக்கி ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. இதனை அவர் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தப் புரிதல் இல்லாத சுஜீவ சேனசிங்க போன்றவர்கள் ஒரு மாற்றுக் கருத்துக்களை சொல்லுகின்ற பொழுது, எவ்வாறு தழிழ் மக்களது வாக்குகளை பெற முனைகிறார்கள், பிரபாகரனை அல்லது தழிழீழ விடுதலைப் புலிகளை காரணம் சொல்லி விட்டு பிறகு தமிழ் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் எனக் கேட்டால் அது எவ் வகை நியாயமாக இருக்கும்.

முதலிலே தமது கருத்துக்களை இன ரீதியாக இல்லாமல் யதார்த்தத்தை உணர்ந்து சொல்ல வேண்டும் என்பதே தமிழ் மக்களது வேணவா.

சிங்களம் இன்னும் அடிப்படை பௌத்த பேரினவாத சிந்தனையில் இருந்து மாறவில்லை. புதிதாக முளைத்து வளருகின்ற சுஜீவ சேனசிங்க போன்ற இளைய தலைவர்களிடம் அது இன்னும் குடி கொள்கிறது. சிங்கள் மக்களிடம் இன்னமும் அவர்கள் இனவாதம் சொல்லத்தான் விரும்புகிறார்கள். தமிழர்களுக்காக யார் போராடினார்களோ அவர்களை புலிகளாக காட்டடத்தான் முனைகிறார்கள். சிங்கம் எப்பொழுதும் எங்களை அழிக்கிற, இனவாதத்தை புகுத்தி எங்களை இல்லாமல்ச் செய்வதற்காக, சிங்கள மக்களிடம் இனவாத்தை தொடர்ந்தும் விதைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்த நிலையிலே தான் நாம் ஒரு தேசிய இனமாக இந்த மண்ணிலே எமது அடையாளத்தை இழந்து போகாமல் நாங்கள் மனிதர்களாக வாழுகின்ற பக்குவத்தைப் பெற வேண்டும். இந்த வகையில் அபிவிருத்தி என்பது எமது இனத்துக்கான விடிவினைத் தந்து விடாது, ஆனால் அதுவும் தேவை. இதற்கும் அப்பால் நாம் தொடர்ந்தும் இன விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது என்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com