ஆசிரியர்களின் செயற்பாடுகள் குறித்து இறுக்கமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் – வடக்கு முதலமைச்சர்

CM-1கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் அனுப்ப வேண்டிய கால கட்டாயத்திற்கு தாம் உள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதாரணத்திற்குத் தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் எனவும் ஒரு ஆசிரியர் ஒழுக்க நெறி பிறழ்வில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதனை உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பதுங் கூட தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் புலோலி புற்றளை மகா வித்தியாலய நூறாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு
புதிய நிர்வாகத் தொகுதி, திறந்த வெளி கலையரங்கம், நுழைவாயில்
திறப்பு விழாவும் பரிசில் நாளும் நூற்றாண்டு மலர் வெளியீடும் தபால் தலை வெளியீடும்
24.06.2016 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் முழு வடிவம் வருமாறு

குருர் ப்ரம்மா…………………….
இக் கல்லூரியின் அதிபர் அவர்களே, அமைச்சர் கௌரவ திரு.குருகுலராஜா அவர்களே, கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களே, தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும் நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையின் உரிமையாளருமாகிய எனது நண்பர் திரு S.P.சாமி அவர்களே, இங்கிலாந்தில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கும் உங்கள் பழைய மாணவர் என் நண்பர் திரு.சிதம்பரப்பிள்ளை அவர்களே, அவர்தம் பாரியார் அவர்களே, என் இனிய மாணவர் திரு.இரட்ணசிங்கம் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, மற்றும் இங்கே கலந்து கொண்டிருக்கின்ற கௌரவ விருந்தினர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, மாணவச் செல்வங்களே!
இலங்கை பிரித்தானியர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் அவர்கள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தமது சமயத்தைப் பரப்பவும் மேற்கொண்ட முன்னெடுப்புக்களால் மி~னரிமாரின் செயற்பாடுகள் இப் பகுதிகளில் முடுக்கி விடப்பட்டிருந்தன. சமயத்தைப் பரப்பும் ஒரு உபாயமாக மி~னரிமார் பாடசாலைகளை நிறுவி ஆங்கிலக் கல்வியையும் ஏனைய பாடங்களையும் முறைசார்ந்த கல்வியினூடாக வழங்க முற்பட்டனர். இதனால் கல்வியில் ஆர்வம் கொண்ட பல இந்துக்கள் தமது சொந்த மதத்தைவிட்டு கிறிஸ்தவ சமயத்தைத் தழுவ முற்பட்டனர்.
இந் நிலை கண்டு இந்துசமயத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் மிகுந்த பற்றுதலைக் கொண்ட நாவலர் பெருமான் போன்றோர் கிளர்ந்தெழுந்து இந்து சமயத்தைப் பாதுகாக்கும் பெரும் பணியை ஆரம்பித்தனர். அப் பணிகள் காரணமாக புதிய சைவப் பாடசாலைகள் தோன்றின. இருந்த பாடசாலைகள் எழுச்சி பெற்றன. சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் புகழ் பெற்று மீண்ட பின்பு இவர்களின் செயற்பாடுகளில் புதியதொரு ஊக்கமும் உத்வேகமும் தோன்றத் தொடங்கின. இதனால் சைவ சமய சங்கங்களும் தனிநபர்களும் சைவப் பாடசாலைகளை நிறுவி சைவச் சிறார்களையும் அவர்களின் பண்பாடுகளையும் பாதுகாக்க முற்பட்டனர்.
புலோலி, புற்றளைப் பகுதியைச் சூழவும் கிறிஸ்தவ பாடசாலைகள் வலுப்பெற்ற போது பல சைவப் பிள்ளைகள் அவைபால் ஈர்க்கப்பட்டனர். இந் நிலையில் சைவப் பிள்ளைகளுக்கு ஏற்ற ஒர் கல்வி நிலையம் அமைய வேண்டும் எனப் பலரது உள்ளத்திலும் ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தின் மேலீட்டால்த்தான் புற்றளைப் பிள்ளையாரை அண்மித்த சூழலில் இப்பாடசாலை ஒரு சைவப் பாடசாலையாக தென்னோலைக் கீற்றுக் கொட்டிலில் 1916ல் திண்ணைப் பள்ளிக்கூடமாக புலோலி, புற்றளை சாரதா பீட வித்தியாசாலை என்ற நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்டதாக உங்கள் பாடசாலை வரலாறு பற்றி எனக்கு தரப்பட்ட குறிப்பேடுகளில் இருந்து அறிந்து கொண்டேன்.
எமது மூதாதையர்களின் தூர நோக்கே சைவமுந் தமிழும் இங்கு கொஞ்சிக் குலாவுவதற்கு இடம் அளித்துள்ளது. இப் பகுதியில் எமது மொழி உணர்வுகள் சமய உணர்வுகள் அற்றுப் போய்விடக்கூடாது என்ற உயரிய சிந்தனையில் உருவாக்கப்பட்ட பல சைவப் பாடசாலைகள் இன்று வளர்ச்சி பெற்று உயரிய நிலையில் எமது மாணவர்களுக்கு கல்விப் பசியை தீர்த்துவருகின்றன. இதற்கு நாங்கள் எங்கள் முன்னோர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
அந்த வகையில் 1916ல் ஆரம்பிக்கப்பட்ட புற்றளை சாரதா பீட வித்தியாசாலை பல உயர்வுகளையும் வளர்ச்சிகளையும் பெற்று இன்று புற்றளை மகா வித்தியாலயம் என்ற பெயருடன் தனது நூறாவது ஆண்டு நிறைவு விழாவை மிகக் கோலாகலமாக கொண்டாடுகின்ற மூன்று நாள் கொண்டாட்டங்களின் முதல் நாள் நிகழ்வில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு. வடமராட்சி மண் கல்வி விளைச்சலுக்கு ஏற்ற ஒரு தனித்துவம் மிக்க மண். வடமராட்சி கல்விச் செல்வத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வந்ததால் உங்கள் மாணவ மாணவியர் சென்ற இடமெல்லாம் அவர்களுக்கு மதிப்புக் கிடைத்து வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. வடமராட்சி பகுதி மாணவர்களுக்கு கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் ஹாட்லிக் கல்லூரி, வேலாயுதம் பாடசாலை, புனித இருதய கல்லூரி, மெதடிஸ்ற் கல்லூரி போன்ற முன்னணிப் பாடசாலைகளுடன் புற்றளை மகா வித்தியாலயமும் தன் பங்கிற்கு பழுதிலா கல்விச் சேவையை இப் பகுதி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. இப் பகுதியில் கல்வி பெற்ற மாணவர்கள் தமது கடின உழைப்;பினால் பற்பல உயரிய பதவிகளில் சேவையாற்றுகின்றமை நாம் அனைவரும் அறிந்ததே.
அவர்களின் இலட்சியம் தூர நோக்கைக் கொண்டதாக அமைந்திருப்பது பல விடயங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. வசதிக் குறைவினாலோ அல்லது வேறெந்தக் காரணங்களினாலோ தமது கல்வியை முழுமையாகத் தொடர முடியாத பல மாணவர்கள் சிறு சிறு அரச தொழில்களில் இணைந்து கொண்ட பின்னர் கூட அத் தொழிலின் மூலமாகக் கிடைக்கக் கூடிய வருமானத்கை வைத்து வாழ்க்கை நடாத்திக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றிகண்டு பல உயரிய பதவிகளை பிற்காலத்தில் வகித்திருக்கின்றார்கள். இது இவர்களுக்கே உரிய தனிச் சிறப்பு. தமது இளமைக் காலத்திலேயே தாம் சென்றடைய வேண்டிய ஒரு மைல்க்கல்லை எங்கோ ஒரு தூரத்தில் அமைத்துவிட்டு அக் கல்லை அடையும் வரை அயராது பாடுபட்டு படித்து பல பட்டங்களைப் பெற்று தமது இலக்கை அடைந்துவிடுகின்றார்கள்.

ஊக்கம் அற்ற மாணவர்கள் தாம் நிற்கின்ற இடத்திலேயே ஒரு கோட்டைக் கீறிவிட்டு அதன் மீது ஏறி நின்று கொண்டு தமது இலக்கைத் தாம் அடைந்துவிட்டதாகத் தம்மையும் ஏமாற்றி தமது குடும்பத்தவரையும் ஏமாற்றுகின்ற ஒரு நிலையை நாம் அவதானிக்கலாம். அந்த நிலை மாற வேண்டும்.
தமிழ்ச் சமூகம் பொதுவாகக் கல்வியில் உயர்ந்தவர்களாக, ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக, கடும் உழைப்பாளிகளாக இனம் காணப்பட்ட சமூகம். இன்றோ அவர்கள் கல்வி கேள்வி அறிவின்றி, ஒழுக்க நெறியில் நின்றும் பிறழ்வடைந்து, ஒழுக்கச் சீர்கேடுகளுடன் எதுவித தொழில் முயற்சியோ, வருமானம் ஈட்டும் நோக்கமோ, குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் எண்ணமோ அற்றவர்களாகக் காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் கொலை, களவு போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதும் எம்மை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகின்றன.
உலகலாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்கள் பொதுவாகக் கற்றவர்கள், பண்பட்டவர்கள், பண்புடையவர்கள் என்ற நற்பெயரை இதுவரை நிலைநாட்டி வந்துள்ளனர். எனினும் எவ்வளவு தீய பழக்கங்களையும் செயல்களையும் புரிய முடியுமோ அவற்றையெல்லாம் புரிந்து கொண்டு பூமிக்கு பாரமாக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் இன்று எம்மிடையே பார்க்கின்றோம். இவர்களைத் திருத்தி சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய தலையாய பணி இப்போது புதிதாக உருப் பெற்றிருக்கின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள், உறவுகளை இழந்தவர்கள், உடல் அங்கங்களை இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள், வீடு வாசல்களை இழந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானவர்கள் வறுமையால் வாடிக் கொண்டிருக்கும் போது அவர்களை எவ்வாறு கரையேற்றுவது என்று திக்குத் தெரியாமல் நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் மாணவ மாணவியரைக் கரை சேர்க்கும் பிரச்சனை எம்மை மேலும் திணர வைத்துக் கொண்டிருக்கின்றது.

எளிமையிலும் செழிப்புடனும் வாழ்ந்த எம்மவர்கள் இன்று வெட்கித் தலைகுனிகின்றார்கள். பிரச்சனைகள் மாணவ மட்டத்தில் மட்டுமே என்று கூறமுடியாது. நாம் சிறுவர்களாக பாடசாலைகளில் கல்வி கற்ற காலத்தில் எமது ஆசான்களாக எமக்குக் கல்வி புகட்டிய ஆசிரியப் பெருந்தகைகளை ஒரு கணம் எண்ணிப் பார்த்தோமானால் அவர்கள் ஆசார சீலர்களாக, ஒழுக்கம் நிறைந்தவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக, எமது முன்னேற்றத்தின் முன்னோடிகளாக வாழ்ந்ததை நாங்கள் அடையாளம் காணுவோம். அவர்களின் தோற்றங்கள் இப்போதும் எமது மனக் கண்ணில் பசுமரத்தாணியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்றைய தினசரிப் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் எம்மை கதி கலங்க வைக்கின்றன. பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் குறிப்பாகப் பத்துப் பன்னிரண்டு வயது பெண் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வாறு பாடசாலைக்கு அனுப்புவது என ஏங்குகின்றார்கள். ஆரம்பத்தில் இச் செய்திகள் பொய்யானவையா அல்லது புனையப்பட்டவையா என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. ஆனால் தினமும் வரக்கூடிய செய்திகளைப் பார்க்கின்ற போது ஆண் பெண் என்ற வேறுபாடின்றி ஆசிரியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என எனக்குத் தெரியவில்லை. ஆசிரிய குலத்திற்கே அபகீர்த்தி வந்துள்ளதை நாம் உணர வேண்டும்.
குருவைக் கண்ட இடமெல்லாம் வணங்கு என்ற ஒளவைப் பிராட்டியின் கூற்றுக்கு இன்று என்னாகி விட்டது? தகுதியற்றவர்கள் தகைமையற்றவர்கள் தரங்குறைந்தவர்கள் புனிதமான ஆசிரியத் தொழிலினுள் உள்ளிட நாம் இடமளித்து விட்டோம். இதற்குக் காரணம் அரசியல் என்பதிலும் பார்க்கச் சுயநலமே என்பது எனது கருத்து. தூர நோக்கின்றி தருணத்திற்குப் பொருத்தமாக தன்நல காரணங்களுக்காக நாங்கள் தவறான பாதையில் சென்று விட்டோம் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். எனவே கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் அனுப்ப வேண்டிய கால கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் என்று நான் நம்புகின்றேன்.
உதாரணத்திற்குத் தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
மேலும் ஒரு ஆசிரியர் ஒழுக்க நெறி பிறழ்வில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதனை உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பதுங் கூட தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை நடைமுறைப்படுத்த நாம் முன்வர வேண்டும்.

எனவே அன்பார்ந்த ஆசிரியர்களே! ஓர் இரு ஆசிரியர்களின் தவறான பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் தலைகுனிய வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நண்பர்கள், பழகியவர்கள் எனப் பிழை செய்பவர்களுக்கு உதவப் போய் நீங்களும் சேர்ந்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒப்பானவர்கள் அழுத்தம் என்றொன்றுண்டு.Peer Pressure என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். பெரும்பான்மை ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள முடிவெடுத்தால் குற்றமிழைக்கும் ஆசிரியர்களை எழிதில் திருத்தி விடலாம். உங்கள் பெரும்பான்மையினரின் அழுத்தம் தவறு செய்பவரைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் அதற்கென்ன என்று பெரும்பான்மையோர் சிந்திக்கத் தொடங்கினால் ஆசிரிய சமூகத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும். கணணி மூலமாக எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவோம். ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்பின்றி கல்வி புகட்டுவோம் என்று பெற்றோர்கள் கூறத் தலைப்படுவார்கள்.
ஆகவே ஆசிரியர் சமூகம் மீண்டும் ஒரு உன்னதமான சமூகமாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என இச் சந்தரப்பத்தில் கூறி வைக்கின்றேன்.

புற்றளை மகா வித்தியாலயம் தனது நூறாவது ஆண்டு நிறைவு விழாக்களை மிகவும் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் மகிழ்வான விடயங்கள் பற்றிப் பேசாது எதிர்மறையான செயற்பாடுகள் பற்றி உரையாற்றியமைக்காக வருந்துகின்றேன். ஆனால் உண்மையை உணர, உள்வாங்க நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடசாலையும் ஏனைய பாடசாலைகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாக விளங்க இனிப் பாடுபடவேண்டும். அவை பாடசாலைகளாக இல்லாது கோவில்களாக மாற நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவில்களாகத் தினமும் பூஜிக்கத்தக்க வகையில் பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதற்கு நாம் அனைவரும் சிந்தித்து நடவடிக்கைகளை எடுப்போம். எமது பாடசாலைகள் ஆத்மார்த்த கோவில்களாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று இத்தருணத்தில் கூறிக் கொண்டு உங்கள் அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com