அஸ்மினுக்கு ஆப்பு – பறிபோகிறதா பதவி ?

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2013 செப்டம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
அவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும்  போனஸ் ஆசனங்களில் ஒன்றை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அந்த இணக்கத்திற்கமைய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மொழிவின் அடிப்படையில், சகோ. அய்யூப் அஸ்மின் மாகாண சபை உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு NFGG தனது ஆழ்ந்த நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
NFGG யின் அங்கத்தவராக நியமிக்கப்படுபவர் கூட்டமைப்பின் அங்கத்தவராக அல்லாது, NFGG யின் கொள்கைகளுக்கும் தலைமைத்துவ சபையின் வழிகாட்டல்களுக்கும் அமையவே செயற்படுவார் எனவும் இதன்போது உடன்பாடு காணப்பட்டது.
மேலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து, இப்பதவியை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடன் கொழும்பில் விரிவான கலந்துரையாடலொன்றும் நடாத்தப்பட்டது.
அக்கலந்துரையாடலின் போது, பதவிகள் குறித்த NFGG யின் கொள்கைகள், NFGG பிரதிநிதி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாட்டு ஒழுக்க விழுமியங்கள் குறித்து விளக்கப்பட்டது. அத்துடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில், குறித்த பதவியிலிருந்து இரண்டரை வருடங்களின் பின்னர், NFGG யினது உறுப்பினரை மீளழைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் NFGG தெரிவித்திருத்தது.
மேலும், கிடைக்கும் பதவிகளை எவரும் நிரந்தரமாக்கிக் கொள்வது அல்லது சொந்தமாக்கிக் கொள்வது அனுமதிக்கப்பட முடியாதது என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதற்கிணங்க மக்கள் பிரதிநிதிகளை ‘மீளழைத்தல்’ (Recalling) என்ற நடைமுறை NFGG யினால் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் NFGG யின் கொள்கை நடைமுறைகளை உத்தரவாதப்படுத்துவதற்கான 19 அம்ச ஒழுக்கக் கோவையினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலும், NFGG யின் ‘மீளழைக்கும் தீர்மானங்களுக்கு எவ்வித இழுத்தடிப்புகளுமின்றி முழுமையான ஒத்துப்பினை வழங்குவேன்’ என்று இறைவனின் பெயரால் வழங்கப்பட்ட சத்திய வாக்குறுதியினை மக்கள் முன்பாக பகிரங்கமாக வழங்கியதன் அடிப்படையிலுமே, சகோ. அய்யூப் அஸ்மின் இப்பதவிக்கு NFGG யினால் நியமிக்கப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் அய்யூப் அஸ்மின் வட மாகாண மக்களுக்கு NFGG வழங்கிய பதவி மூலமாக ஆற்றிய பணிகளுக்கும் சேவைகளுக்கும் NFGG மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று சுமார் இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்த NFGG யினது அவதானங்கள், அப்போதைய சூழ்நிலைகள் மற்றும் NFGG உறுப்பினரின் நடவடிக்கைகள் மீதான எமது பார்வை என்பவற்றின் அடிப்படையில், NFGG பிரதிநிதியை மீளழைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை சகோ. அய்யூப் அஸ்மினின் பங்கேற்புடன் கூடிய தலைமைத்துவ சபை அமர்வில், ஒரு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கடந்த 2016 மார்ச் மாதம் 02 ஆம் திகதி NFGG நிறைவேற்றியது.
எனினும், இத்தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டி இருந்ததாலும், அப்போது உடனடியாக மாற்றீடாக அப்பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் இருந்த குறிப்பான சில சட்டச் சிக்கல்கள் காரணமாகவும்,  இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.
சகோ. அய்யூப் அஸ்மினை மீளழைப்பதற்காக NFGG ஏற்கனவே மேற்கொண்ட தீர்மானத்திற்கு காரணமாக அமைந்த நியாயங்கள் தொடர்ந்தும் ் உறுதி செய்யப்பட்டிருப்பதனாலும், அந்த இடத்திற்கு இன்னுமொரு முஸ்லிம் பிரதிநிதியை நியமிப்பதற்கு சட்ட ரீதியாக தற்போது சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனாலும், இத்தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டுமென NFGG யின் தலைமைத்துவ சபை  தற்போது தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பாக NFGG தொடர்ச்சியான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்துள்ளது. இதற்கான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்பேச்சு வாரத்தைகளின்போது  NFGG யிடம் உறுதியளித்திருந்தது.
குறிப்பாக, 2017 ஜனவரி  மாதம் 13 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களுடனும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுடனும் நடாத்திய பேச்சுவார்த்தையில் இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அந்த சந்திப்பின் போது “உங்களது கட்சிக்கும் எமது கட்சிக்கும் இடையில்தான் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனடிப்படையில்,  உங்களால் பிரேரிக்கப்பட்டதன் காரணமாகவே அய்யூப் அஸ்மின் என்பவரை மாகாண சபை உறுப்பனராக நாம் நியமித்தோம். தற்போது அவரை மீளழைக்க வேண்டும் என உங்கள் கட்சி தீர்மானித்தால், அதனை மதித்து நிறைவேற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்” என NFGG பிரதிநிதிகளிடம்  இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியாக, கடந்த 2017.04.07 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கௌரவ கே. துரைராசசிங்கம் அவர்களுடன் இது குறித்து கலந்துரையாடப்பட்டது. அவரும் இது தமது கட்சியால் NFGG க்கு வழங்கப்பட்ட பதவி என்று அடிப்படையில் இது குறித்த NFGG யினது தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமது கட்சி ஒத்துழைப்பதாகவும், மாற்றீடாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிரேரிக்கும் ஒருவரை நியமிக்க தாம் தயாராக உள்ளதாகவும் உறுதியளித்திருந்தார். இந்த உத்தரவாதம் தமது கட்சியினது உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும் என்பதனையும் NFGG பிரதிநிதிகளிடம் உறுதியளித்திருந்தார்.
எனவே, அந்த அடிப்படையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சகோ.அய்யூப் அஸ்மினை மீளழைத்து, அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த புதிய அங்கத்தவர் ஒருவரை நியமிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சட்டங்களுக்கு ஏற்ப, பதவியிலிருக்கும் அங்கத்தவர் ஒருவரை நீக்கி விட்டு, புதிய ஒருவரை அங்கத்தவராக நியமிக்கும் அதிகாரம் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு உள்ளது என்பதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.
தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வும் நல்லிணக்கமும் நிலைபெற வேண்டும் என்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படைக் கொள்கையை இந்த சந்தர்ப்பத்தில் NFGG மீள வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com