அரசியல் கைதிகளின் விடுதலையில் அரசாங்கம் இணங்காமை தமிழர்களை ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது – விந்தன் கனகரட்ணம்

அரசியல் கைதிகளின் விடுதலையில் அரசு காட்டும் அசமந்தம் சிங்கள இனவாதத்தின் போக்கையே வெளிகாட்டுகின்றது. ஓர் மனிதாபிமானப் பிரச்சினையில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படும் போதே தமிழ் மக்களின் மனங்களை அது வெல்ல முடியும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ரணில் – மைத்திரி கூட்டரசாங்கம் நல்லெண்ணத்தினை வெளியிடவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியிருந்த பிரச்சினைகளில் அரசியல் கைதிகளின் விடுதலை முக்கியமானதாகும். அரசியல் கைதிகளின் விடுதலையினை அவர்களது குடும்பங்களோடு தொடர்புபட்ட பிரச்சினையாக மட்டும் யாரும் பார்க்கக் கூடாது. இது தமிழ் மக்களின் பிரச்சினையாகும். எனவே இப்பிரச்சினையில் அரசாங்கம் நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தாது செயற்படுவது தமிழ் மக்கள் சகலரினதும் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிராகரிப்பதற்குச் சமனானதாகும்.
ஏற்கனவே அரசுக்கெதிராக மோதல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் பொதுமன்னிப்புக்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, ஜே.வி.பி.யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஆயுதக் கையளிப்பினை மேற்கொண்ட பின்னர் தமிழ் இயக்கங்களின் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேரை விடுவித்ததாக மகிந்த அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறாக படிப்பினைகள் காணப்படுகையில், தற்போதும் பல வருடங்களாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் இருநூற்றுக்கு உட்பட்ட அரசியல் கைதிகளை விடுவிப்பதில் மாத்திரம் பல்வேறுபட்ட பொருத்தமற்ற போக்கினை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தால் சிங்கள மக்கள் குழப்பமடைவர். எதிர்த்தரப்பினரும் இனவாத மதவாத அமைப்புக்களும் கூச்சலிட்டு எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவர். அதுவே மகிந்தவின் பிரசாரங்களிற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என அரசாங்கம் கூறுகின்றது. இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசாங்கத்தின் பொறுப்புணர்வு அற்ற பதிலளிப்பாகும்.
அரசியல் கைதிகளின் மனிதாபிமானப் பிரச்சினையினைக் கூட சிங்கள மக்களிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லி ஓர் அபிப்பிராய மாற்றத்தினை ஏற்படுத்த இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை ஆயின,; எவ்வாறாக இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கம் முன்னோக்கிச் செல்ல முடியும்? இதேயிடத்தில், நாட்டில் நியாயமாக ஏற்படவேண்டியுள்ள மாற்றங்களுக்காக எவ்வாறாக தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடம் நம்பிக்கை வைக்கமுடியும் என்ற கேள்வி எழுகின்றது?
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் சிங்கள மக்கள் குழப்பமடைவர் எனக் கூறும் அரசாங்கத் தரப்புக்கள் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் தமிழ் மக்கள் குழப்பமடைவர் என ஏன்  கருதவில்லை. தமிழ் மக்களின் கோரிக்கையினை நியாயத்தின் அடிப்படையில் பாசீலிக்க அரசும் அதன் சட்டமா அதிபர் திணைக்களமும் பின்னடிக்கின்றன. ஆகவே நாட்டில் தமிழர்களுக்கென்றும் சிங்களவர்களுக்கென்றும் வேவ்வேறான அணுகுமுறைகளையே இந்த அரசாங்கமும் பேணுகின்றது என்பது புலனாகின்றது. இவ்வாறன நிலையில் அரசின் நல்லிணக்கம் கூட சாத்தியமில்லை என்பது வெளிப்படையானது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் போராடுகின்றன. எனவே அரசியல் கைதிகளின் விடுதலையினை அரசியல் கட்சிகளின் கோசமாக தெற்கில் யாராவது பார்க்கத்தேவையில்லை. இது வெறும் மனிதாபிமானப் பிரச்சினை என்பதனை அரசாங்கமும் தெற்கும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com