அரசியல் கைதிகளின் விடுதலையில் மனிதாபிமானம் காட்டப்படுமா? நிருபா குணசேகரலிங்கம்

 

FILE - In this Wednesday, Oct. 14, 2015 file photo, family members of ethnic Tamil detainees sit for a silent protest in Colombo, Sri Lanka. Sri Lanka's government has pledged to quickly process hundreds of ethnic Tamils who have been detained without charges for years on suspicion of links to former Tamil Tiger rebels. Placards read "Release all political prisoners now." (AP Photo/Eranga Jayawardena, File)அரசியல் கைதிகளின் விடுதலை இன்று வரையில் நடைபெறவில்லை. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தவில்லை. சிறைகளுக்கு உள்ளிருந்து விடுதலைக்காக ஏங்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைகளுக்கு வெளியே காணப்படவேண்டிய காத்திரமான அழுத்தங்களுக்கும் பற்றாக்குறையே நிலவுகின்றன.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும் பல காலமாக நடைபெற்றே வருகின்றன. சிறைகளுக்கு உள்ளிருந்து அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக தம்மை வருத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு நியாயம் தான் கிட்டவில்லை. மாறாக பொறுத்திருங்கள் என்ற வேண்டுகோள்களே பல்வேறு வடிவங்களில் முன்வைக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அரசாங்கத்திற்குள்ளாக மக்கள் குறைந்த பட்சம் மனிதாபிமான பிரச்சினைகளுக்கோ அரசியல் தீர்வு விடயத்திலோ தீர்வைக் காண முடியாது என்ற நிலையில் அவரை தோற்கடித்து புதிய அரசாங்கத்தினை பதவிக்குக் கொண்டு வருவதில் தமிழ் மக்கள் அளப்பரிய பங்காற்றியிருந்தனர். தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஒத்துழைத்துழைத்தமைக்கு இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் அதனோடு இணைந்ததும் அதற்கு முன்னர் தீர்க்கப்படவேண்டிய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எதிர்பார்த்த கோரிக்கைகளும் காரணமாக இருந்தன. அவ்வாறாக தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்திடம் எதிர்பார்த்த முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகவே தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையும் உள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தெற்கில் குறிப்பாக சிங்கள மக்கள் எதிர்கொண்ட பல அநீதிகளுக்கு விரைவான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அரசாங்கம் உரிய விரைவான நடவடிக்கைகளை எடுப்பதாக உணர்ந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு அரசாங்கத்தின் மீது குறை கூறுவதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையில் உள்ள இழுத்தடிப்பு மற்றும் நியாயமற்ற போக்குகளும் காரணங்களுள் ஒன்றாக அமைகின்றன.

நாட்டில் உள்ள முக்கிய சிறைகளில் தற்போதும் 200 – 250 க்கு இடைப்பட்ட அரசியல் கைதிகள் உள்ளனர். இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரகாரமே அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படுவதற்கு பெரும் காரணமாகவுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சர்வதேச மற்றும் உள்நாட்டு சமூகமும் “மிகவும் கொடுமையான சட்டம்”; என்றே சுட்டிக்காட்டி இச் சட்டத்தின் நீக்கத்தினை வலியுறுத்துகின்றன. அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்துவது பற்றிக் கூறுகின்றது. எனவே நல்லாட்சிக்குக் குந்தகமான சட்டம் ஒன்றின் ஊடாகவே அரசியல்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பருப்பது நியாயமற்றதாகும்.
உலக பொருளாதார மாநாட்டிற்காக சுவிசர்லாந்து சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று அங்கு தெரிவித்திருந்தார். அடிப்படையில் அரசாங்கம் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை எனக் கூறியது அபத்தமானது. காலாகாலமாக மக்களைப் பாதிக்கின்ற விடயம் ஒன்றை ஒரே சொல்லில் அப்படியொன்று இல்லை என கூறிவிட முடியும் என அரசாங்கம் நினைக்குமானால் இந்த அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை ஏற்கும் மனோநிலையில் இல்லை என்பதைக் குறிப்பதாக அமைந்துவிடும். இது நல்லிணக்கத்திற்கு ஏற்றதாக அமையாது.

free_all_political_prisoners02அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தினால் நேரடியாகவும் தமிழ்த் தலைவர்கள் ஊடாகவும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அவை எல்லாம் கிடப்பில் கிடக்கின்ற ஓர் துர்ப்பாக்கிய சூழ்நிலையே காணப்படுகின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் கைதிகளால் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி தொடர்பு கொண்டு முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வினை இப்பிரச்சினைக்கு முன்வைப்பதாக தெரிவித்திருந்தார். இவ் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஒக்டோபர் 17 ஆம் திகதி உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஜனாதிபதி விடுதலை செய்வதாகக் கூறிய உத்தரவாதத்தின் அடிப்படையில் கைதிகள் உண்ணாவிரதத்தினை நிறுத்திய நிலையில் பிணையில் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்று அரசாங்கம் யோசனையினை முன்வைத்ததனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்திருந்தது.
இரண்டாவது தடவையாக அரசியல் கைதிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், இச் செயற்றிட்டங்கள் துளி அளவில் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என அரசியல் கைதிகள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடந்த ஜனவரியில் அனுப்பிய கடிதத்ததில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் பெப்ரவரி மாத இறுதியில் மீளவும் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். கைதிகள் ஒவ்வொருவரினதும் பின்னும் எவ்வளவோ கதைகள் உள்ளன. குற்றப்பத்திரங்களின் அடிப்படையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் அரசியல் கைதிகளின் வழக்குகள் எவ்வாறு இழுபடுகின்றன என்பதற்கு இங்கு அரசியல் கைதியொருவரின் நிலைமையினை விபரிக்க முடியும். அனராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவர் மதியரசன் சுலக்சன். இவர் வன்னி யுத்த முடிவில் படையினரிடம் சரணடைந்துள்ளார். அதன் பின் 2009.07.1ம் திகதி வரை ஓமந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் ஒன்றரை வருடங்கள் கொழும்பு மற்றும் பூசா முகாம்களில் இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்;. பின் 2012.01.09ம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் விளக்கமறியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 2013.07.15 ம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த வாக்குமூலம் என்று கூறப்பட்டிருந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச் செயல்கள் தொடர்பில் போதுமான ஆதாரங்களை பொலிசார் சமர்ப்பிக்கவில்லை.

வழக்குத் தொடரப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் குற்றப்பத்திரிகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, முன்னைய குற்றப் பத்திரிகை வாபஸ் பெறப்பட்டது. புதிய குற்றப்பத்திரிகைக்கான கால அவகாசமும் கோரப்பட்டிருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவருக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக சுலக்சனின் வழக்கறிஞர் பல தடவைகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இவரின்; தாயார் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கும் பல்வேறு தடவைகள் கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் இன்றுவரை எதுவித பதிலும் கிடைக்கப் பெற்றிருக்காத நிiயிலேயே குறிப்பிட்ட அரசியல் கைதி உண்ணாவிரதத்தினைத் ஆரம்பித்திருந்தார்.lanka2

மற்றையவரான, கணேசன்,சந்திரன் ஆகியோரது உண்ணாவரதம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில் சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக போராட்டத்தினைக் கைவிடுமாறு கோரப்பட்டது. உண்ணாவிரதம் இருந்தவர்கள் உத்தரவாதத்திற்கு சம்மதிக்காது விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றனர். பின்னர் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம், உங்கள் மீதான வழக்கு விசாரணைக்குட்படுத்தப்படவேண்டுமென சட்டமா அதிபர் திணைகளத்தினால் கூறப்பட்டுள்ளமையால் உனடியாக விடுதலை செய்யமுடியாதென அதிகாரிகள்; தெரிவித்தனர். பின்னர் அக்கைதிகள் இருவரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கூடத்திற்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களது வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் உரிய அதிகாரிகளின் மூலம் அறிவித்திருந்ததையடுத்து அச் சமயத்தில் அவர்கள் உண்ணாவிரதத்தினைக் கைவிட்டனர்.

இதுபோன்று மகசின் சிறையில் ஜெ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட 15 அரசியல் கைதிகளும் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரம் இருந்தனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏனைய அரசியல் கைதிகளும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தினையும் கடைப்பிடித்தனர்.
பின்னர் பெப்ரவரி மாத 25 ஆம் திகதி 8 அரசியல் கைதிகள் கொழும்பில் வைத்து விடுவிக்கப்பட்டனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில் இந்த 8 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறே அங்காங்கு சிறிய சிறிய அளவில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்றைய தேவை சகலரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவதே ஆகும்.

மகசின் சிறையில் தடுத்து வகை;கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சாகும் வரையில் போராட்டம் மேற்கொள்ளும் நிலையில் துரிதப்படுத்துதல், விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, புனர்வாழ்வு பொறிமுறையூடாக விடுதலையளித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக அராயும் முகமாக கூட்டம் ஒன்றை அரசாங்கம் நடத்தியது. இவ்வாறான பல விடயங்கள் நடைபெறுகின்றபோதும் ஒட்டு மொத்தத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை இல்லாத நிலையே காணப்படுகின்றது.

பின்னரான சமயத்தில் வெள்ளவத்தையில் வைத்து கருணா குழுவினர் இருவரை கொல்வதற்குத் திட்டமிட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கணேசரத்திணம் சாந்ததேவன,; முருகையன் கோமகன் அகிய இருவருமே சிரேஸ்ட சட்டத்தரணி தவராசாவின் வாதத்தினையடுத்து விசேட நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேராவினால் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறாhக திக்குத் திக்காக சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் தொடர்பில் விவாதத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் நடவடிக்கை எடுத்திருந்தார். இப் பிரேரணையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைவரும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டுமெனக் கோரப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணை நிலையான ஒரு தீர்வை எட்டக் கூடியதாக இருக்கவேண்டும் என சகல தரப்புக்களும் நம்பின. இப் பிரேரணையில் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வழக்கு விசாரணைகளின் போது விடுதலை செய்யப்பட்ட 19 பேருக்கு ஒருவருட புனர்வாழ்விற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் ஆனால் இதனை 3 பேரே ஏற்றதாகவும் கூறினார். ஏனைய 16 பேரும் தாம் குற்றமற்றவர்கள் என மறுப்புத் தெரிவித்த நிலையில் மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறை அனுபவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அரசியல் கைதிகளின் விடயத்தினை தனியே சட்டங்களுடன் பார்க்கவும் அரசாங்கம் முயலக்கூடாது. சட்டங்களுடன் பார்த்தால் இப் பிரச்சினையில் தீர்வை எட்ட முடியாது.
அரசியல் கைதிகளுக்கு வழக்குகளை தாக்கல் செய்வது என்பது மீண்டும் அவர்களுக்கு தண்டணையளித்து சிறைகளுக்கு உள்ளே தள்ளுவதாகவே அமையும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்காக செயற்படும் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவிக்கின்றார். ஆகவே அரசியல்கைதிகள் எல்லோரும் நிபந்தனையற்று விடுவிக்கப்படவேண்டும் என அவர் இக் கட்டுரை வாயிலாகக் கோருகின்றார்.

இலங்கையில் ஒருவர் அரசியல் குற்றங்களுக்கான சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலோ தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர் மீண்டும் விடுவிக்கப்படும் சந்தர்ப்பம் வரையில் அவர் உயிருடன் வருவாரா என்ற அச்சத்துடனேயே முன்னர் வாழ வேண்டிய நிலை காணப்பட்டது. காரணம், அரசியல் கைதிகள் விடயத்தில் சிறைச்சாலைகள் சித்திரவதை செய்வதற்கான நிலையங்களாகவும் அவர்களை அடைத்து வைத்து படுகொலை செய்வதற்கான நிலையங்களாகவும் இருந்துள்ளன. இதனை யாரும் மறுக்க முடியாது.
மேற்குறிப்பிட்ட விடயத்தினை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு 1983 காலப்பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை முதல் மகிந்தராஜபக்ச காலத்தில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபன்,டெல்ருக்சன் வரையிலான படுகொலைகளைக் குறிப்பிட முடியும்.
நாளைய தினம் திங்கட்கிழமை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட டெல்ரூக்சனின் 4 ஆவது ஆண்டு நினைவுதினமாகும். இக் கட்டுரைக்காக டெல்ரூக்சனின் தந்தையார் மரியதாஸ் நேவிஸ் கருத்துரைக்கையில், என்னுடைய மகன் படுகொலை செய்யப்பட்டு விட்டார். அதன் பின்னர் வழக்கு இடையிடையே நடைபெறுகின்றது. இதற்கு மேலாக எதுவுமில்லை என நம்பிக்கைகள் சகலதையும் தொலைத்தவராக பதிலளிக்கின்றார். படுகொலை செய்யப்பட்ட தங்களது மகனின் இறுதிச் சடங்கிற்காக வழங்கப்பட்ட ஆவணம் மட்டுமே அவர்களிடம் இருக்கின்றது. மரணச் சான்றுகூட இல்லை. இது தான் அரசியல் கைதிகளின் நடைமுறை யதார்த்தமாகின்றது.
கடந்த காலங்களைப் போன்று சாட்டுக் கதைகளைச் சொல்லி இழுத்தடிக்காது, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர்கள் குறித்து நிரந்தர தீர்வு காணப்படுவதுடன் அந்தத் தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும்.

நல்லிணக்கத்திற்கான இதயசுத்தியுடன் அரசாங்கம் செயற்படுகின்றதெனில் மனிதாபிமானத்துடன் அரசியல் கைதிகளும் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என அரசியல் கைதிகளின் பெற்றோர் கேட்கின்றனர். அவர்கள் விசேட நீதிமன்றங்கள் மற்றும் புனர்வாழ்வின் ஊடாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்ற நிபந்தனைகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கோருகின்றனர். ஏற்கனவே பலவருடங்கள் சிறைவாசம் அனுபவிக்கும் அரசியல் கைதிகளுக்கு இன்னும் புனர்வாழ்வுகள்; தேவையில்லை என்பதே மனிதாபிமானமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com