சற்று முன்
Home / செய்திகள் / அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் ..தமிழர் மரபுரிமை பேரவை

அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் ..தமிழர் மரபுரிமை பேரவை

அரசாங்கத்திடம் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென்றும், அதை அரசாங்கம் நிறைவேற்ற தவறினால், அரசாங்கத்திற்கு தமிழ் அரசு கட்சி வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தமிழர் மரபுரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தமிழ் அரசு கட்சியின் செயற்பாடுகள் குறித்து காரசாரமான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தையும், முல்லைத்தீவின் ஏனைய பிரதேசங்களையும் பௌத்தமத ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயற்பட்டு வரும் தமிழ் மரபுரிமை பேரவைக்கும், தமிழ் அரசு கட்சிக்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.

தமிழர் மரபுரிமை பேரவையை சந்திக்க விரும்புவதாக இலங்கை தமிழ் அரசு கட்சி கேட்டுக் கொண்டதற்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெற்றது. முல்லைத்தீவு கோவில்குடியிருப்பிலுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், கேசவன் சயந்தன், சத்தியலிங்கம், ரவிகரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்கள் வணபிதா ஆம்ஸ்ரோங் அடிகளார், நவநீதன், வைத்தியர் க.சுதர்சன், நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சர்சைக்குரிய பிக்கு தகனம் குறித்து ஆராயவே இந்த சந்திப்பை விரும்பியதாக, தமிழ் அரசு கட்சியினர் குறிப்பிட்டனர்.

தமிழர் மரபுரமை பேரவை பிரதிநிதிகள் தலைமையுரையாற்றியபோது, சர்ச்சை நடந்து நீண்டநாளாக மௌனமாக இருந்து விட்டு, சட்ட விவகாரங்களிலும் சம்பந்தப்படாமல் இருந்து விட்டு, இப்பொழுது கலந்துரையாட வருவதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இது கட்சி அரசியலுக்கான சந்திப்பா என நேரடியாக கேள்வியெழுப்பினர்.

முல்லைத்தீவு நில ஆக்கிரமிப்பு, நீராவியடி விவகாரம், தமிழர் இனப்பிரச்சனை விவகாரங்களில் தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகளை காரசாரமாக கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் விமர்சித்தனர்.

அங்கு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான நவநீதன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, போர்க்குற்ற விவகாரம் உள்ளிட்டவற்றில் எம்.ஏ.சுமந்திரனின் முடிவுகளை எதிர்ப்பதாகவும், அது மக்களின் முடிவல்ல என சுறியதாகவும் தெரிவித்தார். அத்துடன், மக்கள் பிரதநிதிகளாக இருந்தாலே அப்படி குறிப்பிட முடியுமென்றார்.

இதற்கு பதிலளித்த நவநீதன், சுமந்திரனின் கருத்தை மறுத்தார். மக்கள் பிரதிநிதிகளாக அல்லாமல், வெகுஜன அமைப்பாக முல்லைத்தீவு தமிழர் வளங்களை பாதுகாக்கும் முயற்சியில் தமிழர் மரபுரிமை பேரவையின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டினார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தமிழர் பிரச்சனை சார்ந்து சுமந்திரன் செயற்பட்டிருக்கலாம், வேறு யாரும் செயற்பட்டிருக்கலாம், அரசியலுக்கு வந்ததான் கருத்து சொல்ல முடியுமென்று அர்த்தமல்ல என்றார். அத்துடன், வெகுஜன அமைப்பாக, நீராவியடி விவகாரத்தை தனித்து எதிர்கொண்டதையும், ஒரு நாளில் தமது போராட்ட அழைப்பிற்கு திரண்ட மக்களையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்க முடியாமல் தமிழ் அரசு கட்சியினர் மௌனமாக இருந்தனர்.

இந்த சந்திப்பில் சட்டபூர்வமான உதவிகளை உங்களிடம் கோரவில்லை, அரசியல் ரீதியாக நீங்கள் செய்ய வேண்டியவற்றை செய்ய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு என இடித்துரைத்தனர்.

அரச அனுசரணையுடன் மத்திய அரச நிர்வாக கட்டமைப்புக்களினால் வடக்கு கிழக்கு பகுதிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக பின்வரும் அவசர நியாயபூர்வமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

  1. நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயமாகும். இவ்வாலயத்தைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைப்பதை உடன் நிறுத்த காத்திரமான அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும்.
  2. வடமாகாணத்தில் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்ட தொல்லியல் பிரதேசங்கள், நம்பகத்தன்மையான தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைகழகம், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் நிர்வாக மற்றும் கிராம மட்ட மக்களின் பங்ஙகளிப்புக்கள் உடன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும் வரை, வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிட்ட இடங்களில் தற்போதுள்ள இடங்களைவிட மாற்றங்கள் திரிபு படுத்தல்கள் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாது பேணப்பட வேண்டும் என்பதை வலியுறத்தி அரசாணை ஒன்றினை உடன் வெளியிட குறித்த அமைச்சிடம் இருந்து எழுத்துமூலமான வாக்குறுதி பெறப்பட வேண்டும்
  3. வடமாகாணத்தில் மகாவலி “L “ அபிவிருத்தி வலயம் மூலம் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களமயமாக்கல் தற்போதும் தொடர்ந்து இடம்பெறுவதால் குறைந்தபட்சம் 2007 ம் ஆண்டு வர்த்தமான அறிவித்தல் மீளப்பெறப்படுவதுடன் 1988 ம் ஆண்டு வர்த்தமான அறிவித்தல் எல்லைக்கிராம தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். வரும் நாட்களில் மகாவலி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு மாகாண திணைக்களங்களூடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
  4. GPS தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 2009 ன் பின்னர் வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட ஒதுக்கக் காடுகள் தொடர்பான எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
  5. வனஜீவராசிகள் திணைக்களத்தால் 2009 ம் வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட தேசிய பூங்கா மற்றும் இயற்கை இடங்கள் மக்களின் குடியிருப்பு வாழ்வாதாரம் என்பவற்றுடன் தொடர்புடையது ஆகையால் இவற்றுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் மக்கள் குடியிருப்புக்கள் கலாச்சாரம் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படா வண்ணம் அரசாணை ஒன்று உடன் வெளியிடப்பட வேண்டும்

மேற்குறிப்பிட்ட நியாயபூர்வ கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறோம் என வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகள் எழுத்துமூலமாக கூட்டமைப்பினரிடம் வழங்கப்பட்டது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com