அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் காப்பாற்றப்படவேண்டும் – நிருபா குணசேகரலிங்கம்

kilinochchi (2)
பரவிபாஞ்சான் பகுதியில் உள்ள மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விரைவில் விடுவிக்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களின் தொடர் போராட்டங்களின் பின்னரே இவ் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. போரின் பின்னரான நிலைமையில் மீள்குடியேற்றம் என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நியமங்களின் படி மக்களின் உரிமையாகவுள்ள போதும் அவ் உரிமை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையே கள யதார்த்தங்கள் புலப்படுத்துகின்றன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எவ்வித தங்கு தடைகளும் இன்றி தமது நிலத்திற்கு மீளத்திரும்ப அரசாங்கம் தனது முழுமையான உடன்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். அவ்வாறாக போரின் பின்பாக தமது சொந்த நிலங்களில் மக்கள் குடியேறுவதை இராணுவத்தினர், இடையூறுபடுத்த அல்லது தாமதப்படுத்த முடியாது என ஓர் கொள்கையினை ஒரே தடவையில் அரசாங்கத்தினால் முன்வைக்க முடியாவிட்டாலும்  ஜனாதிபதியினால் வடக்கில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்தினையாவது அரசாங்கம் காப்பாற்றியிருக்கவேண்டும்.
 அதாவது, தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களிடம் அவர்களின் நிலங்கள் எதிர்வரும் ஆறுமாதங்களில் கையளிக்கப்பட்டு விடும் என்ற உத்தரவாதத்தினை அரசாங்கம் உச்சளவில் காப்பாற்றியிருக்கவேண்டும். இவைகள் நடைபெறாத நிலையில் சொந்த காணிகளுக்கு திரும்புவதற்கு இன்றும் போராட வேண்டிய நிலையிலேயே மக்கள் உள்ளனர்.
கிளிநொச்சி நகரினை ஊடறுத்துச் செல்லும் யாழ் – கண்டி வீதியின் கிழக்காகக் பரவிபாஞ்சான் கிராமம் காணப்படுகின்றது. இப் பகுதி போரின் பின்பாக இராணுவ முகாம்கள் காணப்படும் வலயமாகவே இன்றும் உள்ளது. இராணுவத்தினரால் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக கையகப்படுத்தி வைத்திருக்கப்படும் நிலங்களில் இப்பிதேசமும் ஒன்றாகும். இங்கு ஆரம்பத்தில் 88 குடும்பங்களின் வீடுகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் பின்னரான காலப்பகுதியில் விடுவிக்கப்பட்ட வீடுகள் போக,தற்போதும் 35 குடும்பங்களுக்குச் சொந்தமான 13 ஏக்கர் காணி படையினரின் வசமே உள்ளது.
இவ்வாறாக படையினர் வசமுள்ள எஞ்சிய காணிகளையும் விடுவிக்கக்கோரியே மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பலதடவைகள் பல்வேறுபட்ட போராட்டங்களில் ஈடுபட்ட இப் பகுதி மக்கள் இம் முறை தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக இரவு பகலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.kilinochchi (3)
 போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கடந்தவாரம் வடக்கிற்கு விஜயஞ்செய்த  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சந்தித்திருந்திருந்ததுடன் இம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன கெட்டியாராச்சியுடன் கலந்துரையாடியிருந்தார்.
 இதனைத் தொடர்ந்து எதிர்வரும் இருவாரங்களுக்குள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிட்ட காணிகள் விடுவிக்கப்படும் என மக்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஊடாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்தமையினை அடுத்து மக்களின் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இம் மக்களின் பிரச்சினை தொடர்பில் கிளிநொச்சியில் வைத்து கருத்துரைத்த  மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்இ பரவிபாஞ்சான் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான காலத்தினை தன்னால் உடனடியாக வரையறுக்க முடியாவிட்டாலும் எதிர்வரும் சில வாரங்களில் குறித்த மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இவ் வருட தொடக்கத்தில் படையினர் இடமிருந்த காணிகளை விடுவிக்கும் நிகழ்வு ஒன்றிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் எனத்தெரிவித்திருந்த நிலையில் அவ் உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் மீளவும் முன்வைக்கப்படும் உத்தரவாதங்களாகவே இவ் உத்தரவாதங்களையும் பாரிக்க முடிகின்றது.
 எனினும் இம் முறைய பரவிபாஞ்சான் மக்களுக்கான உத்தரவாதம் தவறாது நிறைவேற்றப்படவேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்பப்hகவுள்ளது.
மக்களின் காணிகள் இன்றும் ஆயிரக்கண ஏக்கர்களில் இராணுவத்தினரின் வசமே உள்ளன. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் எவ்வாறாகப் படையினரின் பிடிக்குள் இருந்து தமது சொந்த நிலங்களை முழுமையாக விடுவித்துக்கொள்ளலாம் என்ற ஏக்கம் மக்களிடத்தில் உள்ளது. அவ் ஏக்கத்தினை போராட்டங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் தான் வெளிப்படுத்த முடியும் என்ற வழிவகைகளே மக்கள் தெரிகின்றன.
பரவிபாஞ்சான் காணி உரித்தளர்களின் நிலைமையினை நோக்கினால், அவர்கள் தொடர்ச்சியாக தமது காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். kilinochchi (4)
பரவிபாஞ்சான் மக்கள் படையினரிடம் இருந்து காணிகளை விடுவித்துக்கொள்வதற்காக பலதரப்பட்டவர்களையும் நாடியுள்ளனர். கடந்த மார்ச் மாதப்பகுதியில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் தமது  காணிகளைப் பெற்றுத்தருமாறு கோரியிருந்தனர். அவர் மக்களின் கோரிக்கையினை அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்காக வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
 அதனைத் தொடர்ந்து காணி உறுதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களை உடன் அப்பகுதியில் குடியேற்ற அனுமதியளிக்கப்படும் என பிரதமர் உறுதியளித்திருந்தார். எனினும் அவ் உறுதிமொழி உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடந்த ஏப்பிரலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்து இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமது நிலங்களை நேரில் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவரை பரவிபாஞ்சானுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
 ஏதிர்க்கட்சித்தலைவர் மக்களின் காணிகளைப் பார்க்கச் சென்றதனை இராணுவத்தினரின் முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்திற்கு முரணாகப் புகுந்தார் என குறிப்பிட்டு நாட்டின் அரசியலில் பல்வேறாகத் திரிவு படுத்தப்பட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ முகாமிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டதாக மகிந்த தலைமையிலான  பொது எதிரணியினர் தெரிவித்தனர். இதற்கு மேலாக முற்போக்கற்ற வகையில், வெகுஜனங்களைக் குழப்பும் எண்ணத்தில் செயற்படும் சில சிங்கள ஆங்கில ஊடகங்களும் பலதரப்பட்ட விசமப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன.
 அடிப்படையில் படையினரிடம் பரவிஞ்சானில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்ற விடயம் பல்வேறு கோணங்களில் தரிவுபடுத்தப்பட்டிருந்ததனைக் காண முடிந்தது. படையினர் காணிகளை விடுவிக்கவேண்டும் என்ற விவாதத்தினைக் காட்டிலும் இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித்தலைவர் அத்துமீறி நுழைந்துவிட்டார் இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற சம்பாசணைகளே தெற்கில் முடுக்கிவிடப்பட்டன.
 இதிலிருந்து தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள் இன்றும் பலவாறான இனவாதக் கண்கொண்டும் பிரச்சினைகளைத் திசை திருப்பும் வகையிலுமே நாட்டில் விடயங்கள் தென்படுகின்றன என்பது மறுக்க முடியாததாகின்றது. இராணுவ முகாமிற்குள் எதிர்க்கட்சித்தலைவர் அத்துமீறி நுழைந்தார் எனப்பேசிய பலர் சிங்கள மக்களிடத்தில் தமிழ் மக்கள் சொந்த நிலங்களை விட்டு முகாம் வாழ்வு வாழ்கின்றனர் என்பதை பேச மறுகின்றனர்.
கடந்த யூலையில் பரவிப்பாஞ்சான் மக்கள் தமது நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் எனக் கோரி மாவட்ட செயலகத்திடம் மகஜர் கையளித்திருந்தனர். அம் மகஜரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், இப்பிரச்சினை பற்றி கொழும்பில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துiராடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தீர்வு கிட்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
 இவ்வாறாக பலதரப்பட்டவை இம் மக்கள் விடயத்தில் கூறப்பட்டிருந்த போதும் அல்லது நடைபெற்றிருந்த போதும் இதுகாலவரையில் உரிய முழுமையான தீர்வு முன்வைக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக தாமதம் இன்றி தமது காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றே கோருகின்றனர். வடக்குக் கிழக்கில் தமது காணிகளை  இழந்த மக்கள் தமது நிலங்களே தமக்கு வேண்டும் எனத்தான் கோரி வருகின்றனர். ஒரு ஜனாதிபதி வலிகாமம் வடக்கில் காணிகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மக்களைப் பார்த்து உங்கள் நிலங்களை உங்களிடம் மீள ஒப்படைக்கும் போது சிலர் இனவாதம் பேசுகின்றனர் எனத்தெரிவித்திருந்தார்.
 உண்மையில் நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப் படுவதாகக் கூறப்படுகின்றபோதும் இம் மனநிலைகளில் மாற்றம் ஏற்படாமை துரதிஸ்டவசமானதாகும்.
வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களாகத்தெரிவிக்கப்பட்டும் படையினரின் முகாம்களாக பிரகடனப்படுத்தப்பட்டும் வைத்திருக்கப்படும் நிலங்களில் மக்கள்; மீளக்குடியேற முடியாமல் இருப்பது போரின் பின்பாக மக்களின் உரிமை மீறப்படுகின்றது என்பதுடன் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பான விடயமாகும்.
தற்போது பரவிப்பாஞ்சானில் தமது காணி விடுவிக்கப்பட வேண்டும் எனப் போராட்டம் நடத்திய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் உறுதிமொழியினை அடுத்தே போராட்டத்தினை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அரசாங்கம் இவ் உறுதிமொழி விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பது கட்டாயமானதாகும்.
 அவ்வாறு உரிய உத்தரவாதங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்காது விட்டால் அது எதிர்க்கட்சி குறித்த அங்கீகாரத்தினை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துவிடும்.
அரசியல் கைதிகள் விடத்தில் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக ஜனாதிபதி எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை முன்வைப்பேன் என்றிருந்தார்.
 எனினும் அவ்விடயத்தில் அரசாங்கம் உரியவாறு செயற்பட்டதாக தெரியவில்லை. தெடர்ந்தும் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக போராடியே ஆகவேண்டியுள்ளது.
எனவே மக்களின் முன் முன்வைக்கப்படும் உத்தரவாதங்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதற்கு மேலாக இப் புதிய அரசாங்கமும் வழங்கப்பட்டு பொய்த்துப்போன உத்தரவாதங்கள் தொடர்பில் மக்களுக்குப் பொறுப்புச் சொல்வதும் நல்லாட்சிக்கான நடவடிக்கையேயாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com