அரசாங்கத்தால் கருணா குழுவிற்கு வழங்கப்பட்ட T56 ரக துப்பாக்கியாலேயே ரவிராஜ் சுடப்பட்டார் !

vakeesam-braking-newsஇலங்கை அரசாங்கத்தினால் கிரித்தலை இராணுவ முகாமிலிருந்து கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரகத்தைச் சேர்ந்த 150 துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாகவும் இத் துப்பாக்கிகளில் ஒன்றைப் பயன்படுத்தியே நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்டதாகவும்  சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹான் அபேசூரிய நேற்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் அதிகாரி ஆகியோரது படுகொலை தொடர்பாக பிரதிவாதிகள் ஆறு பேருக்கெதிராக சட்டமா அதிபர் தொடுத்துள்ள வழக்கு முறைப்பாட்டாளர்களின் சார்பில் நேற்று விசேட ஜூரி சபைகளுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தை முன்வைத்து பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வழக்கில் முதலாவது சாட்சியான ப்ரீதி விராஜ் மனம்பெரி என்ற பொலிஸ் உத்தியோகத்தர் இந்த கொலைக்கு தொடர்புடையவர் என்றும் அவருக்கு சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய மண்ணிப்பின் காரணமாக இவர் இந்த வழக்கின் முதலாவது சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ளார் என சிரேஷ்ட சொலிசிட்டர் தெரிவித்தார்.

ப்ரீதி விராஜ் மனம்பெரி கொலையாளி வந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என்று தெரிவித்த சிரேஷ்ட சொலிசிட்டர் வேறு கண்ணால் கண்ட சாட்சியங்கள் இல்லாததினால் இவருக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க சட்டமா அதிபர் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஆஜராகியுள்ள பிரதிவாதிகளுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சாட்சியாளர் வழக்கு நடவடிக்கைகள் முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை பொது மன்னிப்பு வழங்கப்படும் போது விளக்கமறியலில் இருக்க வேண்டும் என்கின்ற சட்ட அடிப்படையை கொண்டே என்றும் சிரேஷ்ட சொலிசிட்டர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் இறந்துள்ள நிலையில் ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்த இருவரும் கருணா தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள மூவரும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதில் ஒரு பிரதிவாதி கடற்படையின் லெப்டிணன் கமாண்டர் ஒருவர் என்று தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் கருணா தரப்பினரும் மேற்படி புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் செய்த இந்த குற்றச் செயல் மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்தார்.

2006ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தின் விசாரணைகள் 2016 ம் ஆண்டே நிறைவடைந்தது. இது மிகவும் சிக்கல்கள் நிறைந்ததாகவும் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 10 வருடங்களாக நடைபெற்ற இந்த விசாரணைகளின் போது இரகசிய பொலிஸாருக்கு சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சில காலம் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சேவை செய்துள்ளார். அரசியல் பிரவேசத்திற்காக அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் சிரேஷ்ட சொலிசிட்டர் தெரிவித்தார்.

நடராஜா ரவிராஜ் தொடர்பான விபரங்களை தான் அவர் தொடர்பாக விசாரணைகளின் போது தெரிவிப்பதாகவும் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com