அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று, நேற்று (28) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), அமைப்பே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது. அதனைச் சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக, 20ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதற்கான இயலுமை.

இந்த கால வரையறைக்குள், மாகாண சபைகள்/சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து விட்டால், அவற்றின் அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு ஒப்படைத்தல்,
சுயாதீன ​தேர்தல்கள் ஆணைக்குழு, பலப்படுத்தப்படவேண்டிய நிலையில், தேர்தல்களுக்கான திகதிகளை அறிவிக்கும் அதிகாரத்தை அந்த ஆணைக்குழுவிடமிருந்து அபகரித்து, நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பேற்றல் ஆகிய மூன்று காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்தின் ஊடாக மக்களுக்கான வாக்களிக்கும் உரிமைக்கும் மற்றும் ஜனநாயக உரிமைக்கும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், அந்தத் திருத்தச் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் பெறுபான்மையை மட்டும் கொண்டு தீர்மானிக்காமல், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பை தயாரிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு இருக்கும் உரிமைக்குக் கௌரவமளித்து மற்றும் அதனை ஏற்றுக்கொண்டு, அந்த செயற்பாட்டின் ஊடாக மக்களின் அரசுரிமை மீறப்படக்கூடாது. அந்த அடிப்படையிலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் அதனை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ள உள்ள முயற்சியைத் தாங்கள் வரவேற்பதாகவும் எனினும், அந்த நோக்கத்தில் தேர்தல்களை ஒத்திப்போடுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை தாம் வன்மையாக எதிர்ப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று அடிப்படைக் காரணங்களை முன்வைத்து, இந்தத் திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கேட்டறிந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம், அடுத்தமாதத்துடன் நிறைவடைய உள்ளன. அந்த மாகாண சபைகள் உள்ளிட்ட சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்தும் நோக்கிலேயே, இந்தத் திருத்தத்தை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுத்திருந்ததாக அரசாங்கம், ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இந்தத் திருத்தத்துக்கு எதிராக, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் அடங்கலாக, சுமார் பத்து மனுக்களையும் தாக்கல் செய்வதற்கு ஏற்பாடாகியிருந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com