அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது – நள்ளிரவு வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்குமா ?

us_16524
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலக நாடுகளும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை முடிவு செய்யும் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்-ம் போட்டியிட்டுள்ளனர். இன்று அந்நாட்டில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை இப்போதே உங்களால் கணிக்க முடியுமா? ஆனால், அமெரிக்க மக்கள் சிலர் கணித்துள்ளனர். அது எப்படி சாத்தியம் என நினைக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தின் கீழ் வரும் டிக்ஸவில் நாட்ச் ( Dixville Notch ) கிராமத்தில் நடக்கும் நள்ளிரவு தேர்தலில் பதிவாகும் முடிவை வைத்தே, அந்நாட்டின் அடுத்த அதிபர் யார்? என்பதை அமெரிக்க மக்கள் தீர்மானிக்க உள்ளனர்.us-1_16482

வெறும் 12 ஓட்டுகளை மட்டுமே கொண்ட டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் நள்ளிரவில் தேர்தல் நடத்தப்படுகிறது, அதாவது தேர்தலுக்கு முதல் நாள் இரவில் நடத்தப்படும் இத்தேர்தலில் பதிவாகும் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு விடும். அதன்படி, நேற்றிரவு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தம் இருந்த 12 பேரில் எட்டு பேர் மட்டுமே வாக்களித்தனர், அதில் நான்கு ஓட்டுகள் பெற்று, ஹிலரி முதலிடத்திலும், இரண்டு ஓட்டுகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், ஒரு ஓட்டுடன் கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்

இதற்கு முந்தைய அனைத்து அதிபர் தேர்தல்களின் போதும், இக்கிராமத்தில் அதிக ஓட்டுகளைப் பெறுபவரே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார், இதுவே கடந்த சில ஆண்டுகளில் நடந்துவருகிறது. 2000, 2004, 2008 தேர்தல்களில் அப்படியே நடந்தது. ஒபாமா முதல்முறை போட்டியிடும்போதுகூட மக்களின் ஆதரவு விதிதத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், இந்த கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவின்படியே பின்னர் நிலைமை மாறிய வரலாறு உண்டு.

டிக்ஸவில் நாட்ச் -ன் நள்ளிரவுத் தேர்தலும் அதன் பின்னணியும்:

நியூ ஹாம்ப்ஷையர் சட்டத்தின் படி (New Hampshire law) 100-க்கும் குறைவான மக்கள் உள்ள கிராமங்களில் நள்ளிரவு தேர்தல் (Midnight Voting) நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் 1960-ம் ஆண்டிலிருந்து டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் இந்த நள்ளிரவு தேர்தல் முறை நடந்து வருகிறது. இதற்கு ஒரு சுவாரஸ்யமான வியாபார தந்திர வரலாறும் உள்ளது. 1960-ம் ஆண்டு, நீல் டிலாட்ஷன் என்ற வியாபாரி இந்த கிராமத்தில் பால்சம்ஸ் கிராண்ட் ரிசார்ட் என்ற விடுதியைத் தொடங்கினார். அதில் பணிபுரிவதற்காக 12 பேரை அழைத்து வந்தார். தனது விடுதியை விளம்பரப்படுத்துவதற்காக, பணியாளர்களை அந்த கிராமத்திலேயே தங்க வைத்தாராம். இதன் காரணமாகத்தான் 12 பேர் கொண்ட டிக்ஸவில் நாட்ச் கிராமத்துக்கு நள்ளிரவு தேர்தல் அறிமுகமானது. ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் பலமுறை இந்த கிராமத்தின் தேர்தல் முடிவை அப்படியே பிரதிபலித்து இருக்கின்றன.

இப்படி அமெரிக்க அரசியலில் மிக நெருக்கமான தொடர்பு கொண்ட இந்த கிராமத்தில் நடைபெறும் கடைசி நள்ளிரவுத் தேர்தலும் இதுவாகத்தான் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காரணம், இந்த பால்சம்ஸ் கிராண்ட் ரிசார்ட் என்ற விடுதியை லெஸ் ஓட்டன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் வாங்கியுள்ளார். பின் வரும் நாட்களில் அந்த விடுதியை விரிவுபடுத்தப்போவதாகவும், 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையில் சேர்த்து அங்கேயே தங்க வைக்கப் போவதாகவும் கூறியுள்ளாராம். “100-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கேயே தங்கி இருந்தால் அந்த கிராமத்தில் ‘நள்ளிரவுத் தேர்தல்’ நடத்த முடியாது. எனவே இனி வரும் காலங்களில் டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் ‘நள்ளிரவுத் தேர்தல்’ நடப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகும்” என்கின்றனர் அப்பகுதி மக்கள்

இந்த நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தில் டிக்ஸவில் நாட்ச் என்ற கிராமத்தில் மட்டும் ‘நள்ளிரவுத் தேர்தல்’ நடைபெறவில்லை. ஹார்ட் லொகேஷன், மற்றும் மைல்ஸ் ஃபீல்டு ஆகிய மேலும் இரண்டு கிராமங்களிலும் 100-க்கும் குறைவான மக்கள் வசிப்பதால், அங்கும் ‘நள்ளிரவுத் தேர்தல்’ நடத்தப்படுகிறது.

இந்தமுறை நடக்கும் தேர்தலில் டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் மட்டுமல்ல, மேலும் ஒரு கிராமத்திலும் நள்ளிரவுத் தேர்தல் முடிவில் ஹிலரியே வெற்றிபெற்றுள்ளார். டிக்ஸவில் நாட்ச்-ல் 4-க்கு இரண்டு என்ற விகிதத்திலும், ஹார்ட் லொகேஷன் கிராமத்தில் 17 – 14 என்ற விகிதத்திலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். ஆனால் மைல்ஸ் ஃபீல்டு பகுதியில் 16 – 4 என்ற விகிதத்தில் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார். இந்த மூன்று கிராமங்களின் ஒட்டு விகிதங்களையும் சேர்த்துப் பார்த்தால், டிரம்ப் 32 – 25 ஓட்டு விகிதத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார். இதன்படி பார்த்தால், இந்த முறை டிக்ஸவில் நாட்ச் தேர்தல் முடிவை வைத்து மட்டும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது என்று அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, அடுத்த அமெரிக்க அதிபர் யார் ? என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் ஒருநாள் பொறுத்திருப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com