அமெரிக்கா-மெக்சிக்கோ இடையே தடுப்புச் சுவர் – மெக்சிக்கோவிடம் பணம் கேட்கும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு மெக்சிகோ பணம் செலுத்தாது என்று மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நிடோ அறிவித்துள்ளார்.

இந்த தடுப்புச் சுவருக்கு கடும் கவலை வெளியிட்ட பெனா நிடோ, “சுவர்களை மெக்சிகோ நம்பவில்லை” என்றார். எனினும் அமெரிக்க புதிய ஜனாதிபதியை சந்திக்க ஜனவரி 31 ஆம் திகதி வொஷிங்டன் செல்லும் பயணத்தை ஒத்திவைக்கும் எந்த அறிவிப்பையும் மெக்சிகோ ஜனாதிபதி வெளியிடவில்லை.

டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில், ஊடுருவிச் செல்ல சாத்தியமற்ற சுவரை எழுப்பவும் அதற்கு மெக்சிகோ அமெரிக்காவுக்கு இழப்பீட்டை செலுத்தவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெனா நிடோ, “மெக்சிகோ எந்த ஒரு சுவருக்கும் பணம் செலுத்தாது என்பதை நான் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

இந்த தடுப்புச் சுவருக்கான செலவை மெக்சிகோ 100 வீதம் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். எனினும் பில்லியன் டொலர்கள் செலவாகும் இந்த சுவருக்கு நிதி ஒதுக்க கொங்கிரஸ் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்புச் சுவர் எழுப்பும் டிரம்ப்பின் அறிவிப்பு மெக்சிகோவெங்கும் ஒரு பரந்த சீற்றத்தை தூண்டியுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் இதனை ஒரு விரோதச் செயல் என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.

இது குறித்த பதில் நடவடிக்கையை ஆலோசிக்க மெக்சிகோவின் மாநில ஆளுநர்கள் மற்றும் செனட் அவை ஆகியோர் அவசர மற்றும் நெருக்கடி கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பிரிக்கும் 2000 மைல்கள் (3200 கி.மீ) எல்லையில் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். மெக்சிகோவில் இருந்து வரும் குடியேறிகளை தடுக்கவே சுவர் எழுப்பும் திட்டத்தை அவர் வலியுறுத்தி இருந்தார்.

இது குறித்து பேசிய டிரம்ப், “எல்லை இல்லா நாடு ஒரு நாடே அல்ல. எல்லை பாதுகாப்பை அமெரிக்கா மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com