அமெரிக்காவினுள் நுளைய 7 முஸ்லீம் நாடுகளிற்கு தடை – 10 மில்லியன் போரை நாடுகடத்தவும் திட்டம்

ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாட்டவர் அமெரிக்காவினுள் நுழைய தடை விதிப்பதாக ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, யமன், சூடான், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை தனது நிர்வாகம், கண்காணிப்பு நடைமுறைகள் சிறந்த முறையில் அமையும் வரை அமுலில் இருக்கும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கையை அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் சுமார் 10 மில்லியன் பேரை அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடை உத்தரவு எதிர்வரும் 90 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் சிரிய அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிறீன் கார்ட் (Green Card) எனப்படும் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றிருக்கின்ற நிலையிலும் குறித்த தடையுத்தரவு நடைமுறையில் இருக்கும், என அத்தடையுத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்குள்ள, நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு குறித்த உத்தரவு (Executive Order) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலக நாடுகளைச் சேர்ந்த பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தஞ்சம் கோரி வருவோரை இவ்வாறு தவிக்க விடுவது நியாயமற்றது எனவும் குறித்த அறிவிப்பால் தான் மனமுடைந்துள்ளதாக, நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பு அமெரிக்க கோட்பாடுகளை மீறுகின்ற வகையில் அமைந்துள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் தெரிவித்துள்ளார்.

இவ்வறிப்பானது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை மறைமுகமாக தெரிவிப்பதாக, அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் விமர்சித்துள்ளது.

அகதிகள் நுழைவது தடுக்கப்பட்டிருப்பதன் மூலம், அவர்கள் மூலமே அமெரிக்கா பாதிக்கப்படுகின்றது எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருப்பதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், மெக்சிகோவிலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை தடுப்பதற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான உத்தரவில், கடந்த புதன்கிழமை (25) ட்ரம்ப் கைச்சாத்திட்டிருந்தார் என்பதோடு, அதற்கு மெக்சிக்கோவும் நிதி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் இரு நாடுகளுக்கிடையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, இதற்கு தாங்கள் எவ்வித நிதியையும் வழங்கப்போவதில்லை என மெக்சிகோ ஜனாதிபதி பெனா நீயடோ தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெறவுள்ள கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com