அமிர்தலிங்கத்தின் மகனால் யாழில் ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீது தாக்குதல்

ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன்(55) மீது இன்று மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் (வெளிநாட்டு பிரஜை) மற்றும் மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த கௌரிகாந்தன் ஆகியோரே தன் மீது தாக்குதலை மேற்கொண்டதாக பரமேஸ்வரன் யாழ் பொலீஸ் நிலையத்தின் முறைபாடு பதிவு செய்துள்ளாா்.
இது தொடர்பில் ஊடகவியலாளா் பரமேஸ்வரன் குறிப்பிட்டபோது,
“சுமார் 32வருட ஊடக வரலாற்றில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அதே போன்று தமிழ் ஆயுதக்குழுக்களாலும் இருந்ததில்லை. ஆனால் பகிரங்கமாக தமக்கு வன்முறை தெரியாதென சொல்லிவந்த கூட்டணியினரால் நான் தாக்கப்பட்டமை வேதனையினை ஏற்படுத்தியுள்ளது“ – என்றார்.

இன்று அமிர்தலிங்கத்தின் 90 வது நினைவு தின நிகழ்வுகள் யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த தமிழன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு சிலை கட்டப்படுவது தொடர்பாக பரமேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழர்களின் தலைவர் என வர்ணிக்கப்பட்ட தளபதி எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களெவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி உட்பட பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயகத்தை குழி தோண்டிப்புதைப்பதற்கான ஒரு சட்டம் அத்துடன் இது தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டம் என்று தெரிந்திருந்தும் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காமல் விட்டதன் மூலம் தனது வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி விட்டார்.

கடந்த இருபத்தெட்டு வருடங்களாக வடகிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமலாக்கப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும், சித்திரவதை செய்யப்பட்டதற்கும் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தமைக்கும் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒரு காரணம் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாதென தெரிவிக்கும் கையடக்க துண்டுபிரசுரத்தை பரமேஸ்வரன் நிகழ்வில் பங்கெடுத்தவர்களிடையே தனது பெயருடன் விநியோகித்திருந்தார்.
இந்நிலையில் பரமேஸ்வரனை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச்சென்று அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் கௌரிகாந்தன் ஆகிய இருவரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com