அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளும்வகையில் புதிய அரசியலமைப்பு – ஜனாதிபதி

maithripala-sirisenaஅனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காங்கேசன்துறை, கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை இன்று(31) பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் 100 வீடுகளைக்கொண்ட இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் பங்களிப்புடன் யாழ் பாதுகாப்பு தலைமையலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் ஐந்தாவது பொறியியல் சேவைப் பிரிவினால் இதற்கான தொழிநுட்ப மற்றும் ஆள்வளப் பங்களிப்புகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 26 வருடங்கள் அகதி முகாம்களில் தங்கியிருந்த 100 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தொிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்தார் எனவும் இனங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் இறுதியில் மோசமான யுத்தமாக மாறி நாட்டுக்கு மிகப்பெரும் அழிவைக் கொண்டுவந்த கடந்த காலத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் மரணமடைந்தமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கில் அல்லது தெற்கில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது எல்லோருடையவும் பொறுப்பாகும் என்றும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார் எனவும்தொிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளினால் ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டதாகவும் தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இந்த வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து ஒரு விசேட குறிப்பும் சின்னத்துடன் வைக்கப்பட்டிருந்தது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தொிவித்துள்ளது.

மைலிட்டி பிரதேச பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 454 ஏக்கர் காணிகள் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான உத்தியோகபூர்வ கடிதம் மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் டி எம் சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com