அதிக பயன்தரவல்ல பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை. – பொ.ஐங்கரநேசன்

 

வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விசனம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பனை அபிவிருத்தி வார இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (28.07.2016) பனை அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக விவசாயபீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சீ.வசந்தரூபா தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கத் தொடக்க அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பனை என்று நாங்கள் பொதுவாக அழைத்தாலும் பனைகளில் வித்தியாசம் உண்டு. வடக்கில் வேறுபட்ட இயல்புகளைக் காட்டுகின்ற பனைமரங்கள் இருக்கின்றன. இவற்றில் குட்டையான பனை மரங்கள், அதிக எண்ணிக்கையான பழங்களைத் தரக்கூடிய பனை மரங்கள், அதிகம் பதநீரைத் தரக்கூடிய பனை மரங்கள், அதிக வெல்லச் செறிவைக்கொண்ட பதநீரைத் தரவல்ல பனைமரங்களைக் கள ஆய்வுகளின்மூலம் அடையாளம் காண்பது அவசியம்.

கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் 200 வகையான பனைகளை இனம்கண்டு தனது வளாகத்தில் நட்டுப் பராமரித்து வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடமும் பனைகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இவற்றை விவசாய பீடம் இயங்கும் கிளிநொச்சியில் நடுகைசெய்து பராமரிக்கவும் முன்வர வேண்டும் இதற்கு பனை அபிவிருத்திச் சபையும் பனை ஆராய்ச்சி நிலையமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடக்க அமர்வில் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் மீனா செந்தில்நந்தனன், பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கா.லோகநாதன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

தொடக்க அமர்வைத் தொடர்ந்து ஆய்வரங்கின் காலை அமர்வு பேராசிரியர் மீனா செந்தில்நந்தனன் தலைமையிலும், மாலை அமர்வு பேராசிரியர் கு.மிகுந்தன் தலைமையிலும் நடைபெற்றது. 01 02 03 04 05 06 07 08 09 10 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com