அடுத்த வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கு மேலும் பத்தாயிரம் வீடுகள் கிடைக்கும் – அமைச்சர் திகாம்பரம்

Thikaஅரசாங்கத்தின் அடுத்த வரவு செலவு திட்டத்தில் மலையகத்திற்கு மேலும் பத்தாயிரம் வீடுகள் வேண்டும் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் தெரிவித்துள்ளதாகவும், நிச்சயமாக இவ்வீடுகள் கிடைக்கும் எனவும், அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர் குடியிருப்பு லயம் ஒன்றை முற்றாக அகற்றி 23 தனி வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 07.08.2016 அன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத்திலும் சரி மக்கள் கூட்டங்களிலும் சரி பேச்சை குறைத்துக் கொண்டு சேவையை செய்வதற்கு முக்கிய இடத்தை கொடுக்க வேண்டும் என்பது எனது இலக்காக அமைந்துள்ளது.

இன்று பெருந்தோட்ட மக்கள் தெளிவுப்பட்டுள்ளனர். ஏமாற்றம் அடையும் வாய்ப்பு இனி இவர்களிடத்தில் இல்லை. ஏமாற்றி வந்தவர்கள் எம்மை தாக்கிய காலம் இருந்தது. இப்பொழுது அவ்வாறான நிலை உருவானால் எவர் தூண்டுகிறார்களோ அவர்களை தாக்கும் நிலைமையாகி விட்டது.

தோட்ட தொழிலாளர் சம்பள விடயத்தில் சில தலைவர்கள் அறிவு இழந்து செயல்பட்டு வருகின்றனர். தேயிலையின் விலை வீழ்ச்சி காரணமாக சம்பளம் தொடர்பான பேச்சுக்கு தரப்புகள் வரவில்லை. அங்கு பெட்டிகள் மாற்றப்படும் நிலை ஏற்பட்டால் சம்பள பிரச்சினை முடிந்திருக்கும். அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது.

இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்டிருக்கும் 2500 ரூபாய் நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். இதற்கும் வெளியில் உள்ள கூட்டு உடன்படிக்கையை தொடர்பு இல்லை. கூட்டு உடன்படிக்கையை முன்னெடுக்க செல்ல முடியாவிட்டால் ஒதுங்கட்டும். சம்பளத்தை நாங்கள் பெற்றுக்கொடுப்போம்.

தற்பொழுது கம்பனிகள் பேச்சுக்கு அழைத்துள்ளது. தொடர்ந்தும் பேசட்டும். சம்பள உயர்வை பெற்று தர வேண்டும். போராட்டம் ஒன்று இடம்பெறுமானால் ஒத்துழைப்பு தருவதற்கு நாம் தயார். தொழிலாளர்களுடைய விடயம் என்பதால்.

ஆனால் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் துணை போக மாட்டோம். கோட்டை அமைத்துக்கொண்டு வாழ்வது பெரிதல்ல உள்ள ஓட்டைகளை முதலில் அடைக்க வேண்டும். மலையகத்தின் தலைவர் ஒருவர் பிறந்த இடத்திலேயே அங்கு வாழ்கின்ற மக்கள் இயற்கையின் அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் நிலையில் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்த இடத்தில் அதாவது வேவண்டன் தோட்டத்தில் 59 பேருக்கு தனி வீடுகளை அமைத்துக்கொடுக்க அடுத்த வாரம் அடிக்கல் நாட்டப்படும் என்பது உறுதி.

5 வருட காலத்தில் கூட்டு அமைப்பாக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி மூன்று முக்கிய அமைச்சுகளின் ஊடாக மலையக மக்களை அவர்களின் வாழ்வாதாரத்திலும், கல்வியிலும், மொழியிலும், வீடு, காணி என்ற உரிமையிலும் உயர்த்தி வரும் என்பதில் ஐயம் இல்லை. கூட்டமைப்பு ஒற்றுமையை எவராலும் அசைக்க முடியாது இது மக்களின் உரிமைக்காக இணைந்த கூட்டமைப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com