சற்று முன்
Home / செய்திகள் / அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கே உபசரணை செலவு 2.7 மில்லியன் ..

அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கே உபசரணை செலவு 2.7 மில்லியன் ..

யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாளை இரண்டாவது தடவையாக நாட்டப்படவுள்ளது. இந்த நிகழ்வின் உபசரணை செலவாக 27 இலட்ம் ரூபாவை ஒதுக்கி அதிர்ச்சியளித்துள்ளது யாழ் மாநகரசபை.

நேற்று (5) இடம்பெற்ற மாநகரசபை அமர்வின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நேற்றைய அமர்வின்போது, முதல்வர் ஆனோல்ட் இதற்கான கோரிக்கையை முன்வைத்தார். “2,300 மில்லியன் ரூபாவில் யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடக்கவுள்ளது. இதற்காக 2,200 பேர் கலந்துகொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உணவு, வரவேற்பு, மண்டப செலவாக 2.7 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. மாநகரசபையே இதற்கான நிதியை வழங்க வேண்டும்“ என கோரினார்.

இதன்போது, யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வ.பார்த்தீபன், “இது அடிக்கல்லுடன் நின்றுவிடுமா? கட்டி முடிக்கப்படுமா?. கடந்த 2014 ம் ஆண்டு இந்த கட்டடத்திற்கு பசில் தலைமையில் முதலாவது தரம் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது எந்த செலவும் செய்யவில்லை. ஆனால் திட்டதும் நடக்கவில்லை. அது அரசியலுக்காக செய்யப்பட்டது. இப்பொழுதும் அடிக்கல் நாட்டுகிறீர்கள். அதற்காக பெருந்தொகை பணத்தை செலவிடுகிறீர்கள். புதிய கட்டடத்திற்காக மாநகரசபை 300 மில்லியன் ரூபாவை வைப்பிலிட்டு வைத்துள்ளது. மாநகரசபை பணத்தை பெறாமல், அரசாங்கமே இந்த கட்டடத்தை கட்டி தருமெனில், எமக்கு 300 மில்லியன் கிடைக்கும். அதனுடன் ஒப்பிடும்போது, 2.7 மில்லியன் பெரிய பணமல்ல. ஆனால், இதுவும் அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டு, கட்டடம் கட்டப்படாவிட்டால், இந்த பணத்தை அனுமதிக்கும் இந்த சபையின் 45 உறுப்பினர்களுமே அந்த பணத்தை மீள செலுத்துவோம்“ என்றார்.

இதற்கு ஈ.பி.டி.பி எதிர்ப்பு தெரிவித்தது. பார்த்தீபனின் திட்டத்திற்கு தாம் சம்மதிக்கவில்லையென்றனர்.

நிகழ்வு செலவுகளிற்காக கூறுவிலை கோரப்பட்டதா? இவ்வளவு பெருந்தொகை பணம் எதற்காக செலவிடப்படுகிறது? இதன் விபரங்களை தர முடியுமா? என முன்னணி உறுப்பினர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். இதையடுத்து செலவு விபரத்தை முதல்வர் தரப்பு சமர்ப்பித்தது.

நிகழ்வின் பந்தல் செலவு 16 இலட்சம் ரூபா. (ஜனாதிபதியின் கடந்த வார நிகழ்விற்காக கொழும்பிலிருந்து யாழிற்கு கொண்டு வரப்பட்ட பந்தல் இது. தற்போது, போக்குவரத்து செலவை தவிர்த்து, 50 வீத கழிவுடன் இந்த தொகைக்கு வாடகைக்கு விடப்படுகிறது).

ஜெட்விங் ஹோட்டலில் 150 பேருக்கு மதிய உணவு. ஒரு உணவின் விலை 2,500 ரூபா.

2,200 பேருக்கு சிற்றுண்டி. ஒவ்வொருவருக்கும் 100 ரூபா பெறுமதியான சிற்றுண்டி. வடை, பயிற்றம் உருண்டை, பால் பக்கட், பற்றிக்ஸ் அதிலிருக்கும்.

இதுதவிர, நாதஸ்வரம், மற்றும் இசை குழுக்களிற்கான பணம் என இதற்கான கணக்கு காண்பிக்கப்பட்டது.

நீண்டவாதப்பிரதிவாதங்களின் பின்னர் மாநகரசபையின் மக்கள் வரிப்பணமான 2.7 மில்லியன் ரூபா, அடிக்கல் நாட்டும் நிகழ்வின் உபசரணை செலவாக ஒதுக்க அனுமதிக்கப்பட்டது.

யாழ் மாநகரசபை முதல்வர், மாநகர பணத்தில் இடாம்பீகம் அனுபவிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com