அடாவடி பிக்குவை கைது செய்ய வக்கற்றவர்கள் என்னை விசாரணைக்கு அழைக்கிறார்கள் – வியாழேந்திரன் எம்.பி

vakeesam-articalமட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள தனியார் காணிக்குள் எவரும் உள் நுழைய முடியாது என்று ஏறாவூர் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்த வேளையில் அதற்குள் அத்துமீறி உள் நுழைந்து குந்திக் கொண்டு சட்டத்தை அவமதித்த பிக்குவை கைது செய்ய முடியாது வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இப்பொழுது மட்டக்களப்பு பிக்கு எனக்கெதிராகச் செய்துள்ள முறைப்பாட்டை விசாரிக்க பொலிஸ் நிலையம் வருமாறு என்னை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (29) தெரிவித்த வியாழேந்திரன் எம்பி,

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி அவர் எனக்கெதிராக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த நாட்டின் தற்போதைய நல்லாட்சியிலும் சட்டம் சீர்குலைந்திருப்பதாகத்தான் நான் இந்த விடயத்தைப் பார்க்கின்றேன்.

இந்த நாட்டை குழப்பியடித்து சிறுபான்மை மக்களின் வாழ்வைச் சீரழிக்க மதவாதிகளும், இனவாதிகளும் திட்டமிட்டுள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து இந்த நாட்டைக் கெடுத்தவர்களும் கெடுத்துக் கொண்டிருப்பவர்களும் மதவாதிகளும் இனவாதிகளும்தான்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாரபட்சமில்லாமல் அமுலாக்கப்பட்டிருந்தால் இத்தனை குழப்பங்களையும் அழிவுகளையும் இந்த நாடு சந்தித்திருக்காது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தொடக்கம் இறுதிப் போர் வரை எவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள்.

தூஷண வார்த்ததைகளை அருவருப்பின்றி அள்ளியிறைப்பவர்களை இலங்கையில் பட்டியலிட்டால் அம்பிட்டிய சுமணரத்ன தான் இலங்கையில் முதலிடத்தைத் தட்டிக் கொள்வார்.

அப்படிப்பட்டவர் இந்த நாட்டின் பெண் அதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரைக்கும் தூஷணத்தால் திட்டித் தீர்த்திருக்கிறார்.

மட்டக்களப்பு பிக்கு இப்பொழுது மட்டக்களப்பிலே ஞானசாரர் தலைமையிலே ராவண பலயவைக் கொண்டு வந்து எதிர்வரும் 03 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகின்றாராம்.

இவர்கள்தான் நாட்டின் உண்மையான குழப்பவாதிகள். நாங்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிப்பவர்கள். எனவே, சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக பொலிஸ் அதிகாரிகளும் நல்லாட்சி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com