அஜித்தின் ‘தெறி’ சீக்ரெட்!

”இந்தப் பட ஷூட் தொடங்கின சமயம், ‘இது என்ன மாதிரியான படம்?’னு எல்லாரும் கேட்டாங்க. அப்ப ஒரு ஃப்ளோவுல, ‘இது கலப்படம் இல்லா தல படம்’னு சொன்னேன். இப்ப ஷூட் முடிச்சு, எடிட் முடிச்சு முழுப் படத்தையும் பார்த்தப்ப, நான் சொன்னது சரிதான்னு தோணுது. ஆமாம், இது கலப்படம் இல்லா தல படம்!” – திருப்தியாகச் சிரிக்கிறார் இயக்குநர் சிவா. ‘வேதாளம்’ படத்துக்குக் கிடைத்திருக்கும் ‘தெறி’மாஸ் எதிர்பார்ப்பு, அடுத்தடுத்து அஜித்துடன் இரண்டு படம் என செம குஷி சிவா குரலில். 

”எல்லாரும் ‘வீரம்’ ஹிட்தான் ‘வேதாளம்’ படத்தை எனக்குக் கொடுத்துச்சுனு நினைக்கிறாங்க. ஆனா, ‘வீரம்’ ஆரம்பிச்ச நான்காவது நாளே, ‘தெளிவா இருக்கீங்க சிவா. உங்க மேக்கிங் ஸ்டைல், சின்சியாரிட்டி, உங்க இயல்பு எல்லாமே பிடிச்சிருக்கு. உடனே அடுத்து இன்னொரு படம் பண்ணுவோம்’னார் அஜித் சார். இயக்குநரின் குணம், உழைப்பு, ஸ்கிரிப்ட் – ஒரு படம் கமிட் ஆவதற்கு முன்னாடி இந்த மூணு விஷயங்களையும் அவர் பார்ப்பார். இந்த மூணு விஷயங்கள்லயும் அவரை நான் திருப்திபடுத்தியிருக்கேன்னு நினைக்கிறேன். அதுக்கான பரிசுதான் ‘வேதாளம்’. இப்போ ‘வேதாளம்’ ரிலீஸுக்கு முன்னாடியே, ‘அடுத்தும் நாம ஒரு படம் பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார் அஜித் சார்!”
”அது என்ன ‘வேதாளம்’னு ஒரு டைட்டில்?”
”ஸ்கிரிப்ட் எழுதும்போதே அஜித் சார் கேரக்டர் பேர் ‘வேதாளம்’னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். பழைய முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் படிச்சவங்களுக்கு ‘வேதாளம்’, ‘முகமூடி வீரர் மாயாவி’ கேரக்டர்கள் எல்லாம் பரிச்சயமா இருக்கும். இந்தப் படத்தில் அஜித் சார் கேரக்டர் அப்படியான செட்டப்லதான் இருக்கும். இதைப் பற்றி எல்லாம் பேசிட்டு இருக்கும்போது அஜித் சார்தான், ”வேதாளம்’னே பேர் வெச்சுடலாம்’னார். ‘வி’ல ஆரம்பிச்சு ‘எம்’ல முடியுற அதே ‘வீரம்’ சென்டிமென்ட் எனக்கும் ஓ.கே-னு தோணுச்சு. அதான் இந்தத் தலைப்பு. அதே மாதிரி, ”தெறி மாஸ்’னுதான் இப்போ பசங்க பேசிக்கிறாங்க’னு சொல்லிட்டு இருந்தப்பதான், ‘தெறிக்கவிடலாமா?’னு பன்ச் வெச்சோம். இந்தப் படமும் என் முந்தைய ரெண்டு படங்களைப்போல குடும்ப சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் அதகளம்தான்.
நம்ம எல்லாருக்குமே உடன் பிறந்தவங்க மேல, அதுவும் குறிப்பா அக்கா- தங்கைன்னு சகோதரிகள் மேல அளவு கடந்த பாசம் இருக்கும். அக்கான்னா அடுத்த அம்மா மாதிரியும், தங்கச்சின்னா அடுத்த குழந்தை மாதிரியும் ஃபீல் பண்ணுவோம். அந்த ஃபீல் இந்தப் படத்துல அழகா வொர்க்-அவுட் ஆகியிருக்கு. அஜித் சாரும் இதுக்கு முந்தின தன் படங்களின் எந்தச் சாயலும் இல்லாம இருக்கணும்னு தீவிரமா இருந்தார். ‘இந்தப் படத்துல தர லோக்கலா இறங்கி அடிப்போம்’னு சொன்னவர், இறங்கியும் அடிச்சிருக்கார்!”
”ஸ்ருதி, லட்சுமி மேனன்னு அஜித்துக்கு சவால் கொடுக்குதே ஹீரோயின்கள் பட்டாளம்!”
”ஸ்ருதிக்கு ரியல் லைஃப்ல ஒரு இமேஜ் இருக்குல்ல… ‘போல்டு அண்ட் பியூட்டிஃபுல்’னு. அதுதான் இந்தப் பட ஹீரோயின் கேரக்டரும். அதனாலதான் எந்தத் தயக்கமும் இல்லாம அவரை இந்த புராஜெக்ட்டுக்குள்ள கொண்டு வந்துட்டோம். அவங்க, தான் பாடின பாடல்களை அப்பப்ப எனக்கு அனுப்புவாங்க. அவங்க வாய்ஸ் அப்படியே ஒரு ராக்ஸ்டார் கெத்தோட இருக்கும். படத்துல ஒரு போர்ஷன், இங்கிலீஷ் படம் மாதிரி வேற லெவல்ல இருக்கும். அப்போ வர்ற பாட்டை ஸ்ருதியைப் பாடவெச்சோம். அந்தப் பாட்டை ஷூட் பண்றப்ப காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் முதற்கொண்டு எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு செட்ல ஒரு உதவி இயக்குநர் மாதிரி வலம் வந்தாங்க. சொல்லப்போனா, அந்தப் பாட்டு மொத்தத்தையும் அவங்களே தத்தெடுத்துக்கிட்டாங்க. இப்படி இந்தப் படத்துல ஸ்ருதி ஒரு ஹீரோயினா மட்டும் இல்லை… அதுக்கும் மேல பரபரப்பா வேலைபார்த்தாங்க.
அண்ணன்-தங்கை பாசம்தான் படம். அஜித்துக்கு தங்கச்சியா நான் ஆரம்பத்துலயே லட்சுமி மேனன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். அஜித் சாரோடு லட்சுமிக்கு முதல் நாள் ஷூட்டிங். ரெண்டு பேருக்குமான சென்டிமென்ட் எந்த அளவுக்கு வொர்க்-அவுட் ஆகுமோனு சின்னப் பதற்றம் இருந்துச்சு. தனக்காக உதவினவங்களுக்கு நன்றி சொல்லிட்டு திரும்புற அண்ணன் அஜித்தை, லட்சுமி பாசமா பார்க்கணும்னு சீன். டேக்ல லட்சுமியோட க்ளோஸ்-அப் ரியாக்ஷன்ஸ் பார்த்தேன். நிஜமாவே அஜித் சார் மேல இருக்கக்கூடிய மரியாதை, பிரமிப்பு எல்லாம் கலந்து ரொம்பப் பாசமா ஒரு லுக் கொடுத்தாங்க பாருங்க… படத்துல சென்டிமென்ட் போர்ஷன் பிச்சுக்கும்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. ‘இந்த பெர்ஃபார்மன்ஸ் படம் முழுக்க கொடுத்துட்டீங்கன்னா, நாம நினைச்சதை எடுத்துடலாம்’னு லட்சுமிகிட்ட சொன்னேன். ஸ்ருதி, லட்சுமி… ரெண்டு பேருக்கும் இந்தப் படம் பெஞ்ச்மார்க் அடையாளமா இருக்கும்!”
”அஜித்துக்கு என்ன ஆச்சு… ஆபரேஷன்னு சொல்றாங்க!”
” ‘ஆரம்பம்’ ஷூட்ல பட்ட அடி. அந்தக் காயத்தோடதான் ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’ படங்கள்ல நடிச்சார். இந்தப் படத்துக்காக டான்ஸ் ஆடும்போது ஒரு மூவ்மென்ட் ரொம்ப வேலை வாங்கிருச்சு. தாங்க முடியாத வலி. நிக்கவே முடியலை. ஆனாலும், தொடர்ந்து நடிச்சார். அதான் காரணம். ‘ஷூட்டிங் இத்தனை நாள்ல முடிச்சிரலாம்’னு சொன்ன வாக்கைக் காப்பாத்தணுமேனு அப்படிப் பண்ணார். இப்படி அவர்கிட்ட பல நல்ல குணங்கள். அதை எல்லாம் நான் காப்பி அடிச்சுட்டே இருக்கேன்.
பெண்களை, சக மனிதர்களை அவர் நடத்துற விதம் ரொம்ப மரியாதையா இருக்கும். எனக்கு உடம்பு பெருசு இல்லையா? யாராவது வந்தா எழுந்து நின்னு வரவேற்கணும்னு தோணாது. ஆனா, அவர் அப்படி இல்லை. சின்னக் குழந்தையில ஆரம்பிச்சு, யார் வந்தாலும் எழுந்து நின்னு ‘ஹவ் ஆர் யூ?’னு விசாரிச்சு, அவங்களை உட்காரவெச்ச பிறகே தான் உட்காருவார். அந்த நல்ல பழக்கத்தைக் காப்பி அடிச்சிட்டேன். பெண்கள் வந்தா கதவைத் திறந்து வரவேற்கிறது, கிளம்புறப்போ கடைசி வரை வந்து வழியனுப்புறதுனு அவங்களுக்குச் சின்ன அசௌகரியம்கூட இல்லாமப் பார்த்துக்குவார். செட்ல இருக்கிற எல்லாரும் அதை உணர்ந்தோம். அந்த மாதிரியான நல்ல பழக்கங்களைத்தான் அவர்கிட்ட இருந்து காப்பி அடிச்சுட்டே இருக்கேன்!”
”அஜித் ரசிகர்கள் கொண்டாடுற மாதிரி படம் எடுக்குறீங்க. ஆனா, அதை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கு விமர்சிக்கிறாங்களே… விஜய் படத்தை அஜித் ரசிகர்கள் விமர்சிக்கிறதும் நடக்குது!”
”இது இன்று நேற்று பிரச்னை இல்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல்னு காலம் காலமா இருக்கிறதுதான். ரெண்டு மாஸ் ஹீரோக்கள் ஒரே காலகட்டத்துல இருக்கும்போது, அவங்க ரசிகர்களுக்குள்ள கிண்டல், கேலி, செல்லச் சீண்டல், சண்டை இருக்கிறது சகஜம்தான். ‘பத்ரி’ படத்துல அசிஸ்டென்ட் கேமராமேனா நான் இருந்தப்ப விஜய் சாரும் எனக்குப் பழக்கம். நல்ல நண்பர். ரசிகர்களுக்கு எப்படியோ, எனக்குத் தெரிஞ்சு அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த எனிமிட்டியும் கிடையாது. அவங்க நல்ல நண்பர்கள்தான்.
அப்புறம் அஜித் படம், விஜய் படம்னு இல்லை. படம் பார்க்க வர்ற எல்லாரையும் திருப்திபடுத்துறதுதான் ஒரு இயக்குநரின் வேலை. அதுக்கு நல்ல படங்கள் எடுத்தா போதும். நல்ல படங்களை, எல்லாரும் நிச்சயமாப் பாராட்டுவாங்க. சிலருக்கு நம்மளை பிடிக்காம இருக்கலாம். அவங்க எல்லாரும் நீங்க என்னதான் நல்ல படம் எடுத்தாலும் திட்டத்தான்போறாங்க. ஆனா, படம் உண்மையிலேயே நல்லா இருந்தா, நம்மளைப் பிடிக்காதவங்கக்கூட கொஞ்சம் கம்மியாத் திட்டுவாங்க. அப்போ நாம இன்னும் நல்ல சினிமா எடுக்கணும். திட்டுறவங்களை அமைதியாக்க நாம இன்னும் உழைக்கணும். அவ்ளோதான்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com