அஜித்தின் கடின உழைப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்! – விவேக் ஓபராய்

விவேகம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த அஜித் ரசிகர் கூட்டமும். திரையரங்குகள் எங்கும் பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட்டுகள் என விவேகத்தை பிரமாண்டமாக வரவேற்க தயாராகிவிட்டனர். நிச்சியமாக படம் ரிலீஸான பிறகு சில வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒருபுறமிருக்க இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார் பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய். அவர் கூறியதாவது, “இயக்குநர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 15 நிமிடங்கள் தான் கேட்டேன். போதும், நான் நடிக்கிறேன் என சொல்லி விட்டேன். மொத்த கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை விவேகம் நிரூபித்து விட்டது. தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. போக போக அதுவும் சரியாகிவிட்டது.
படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன். அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசிதான் நடித்தேன்.
அஜித் அண்ணாவை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார். இந்த படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை என்று நான் சொன்னேன். படப்பிடிப்பில் எல்லோரிடமும் இனிமையாக பழகுவார் அஜித் அண்ணா. அஸிஸ்டெண்ட் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் டீ ஊற்றி கொடுப்பார். அவருடன் நடிப்பதை கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
மைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலும் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com