அகிம்சையை கொன்றவர்களால் அதே நல்லூர் வீதியில் அகிம்சை விழா !

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதரகமும் அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் இணைந்து நடத்திய சர்வதேச அகிம்சை தின நிகழ்வு 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நல்லூர் துர்க்காமணி மண்டபத்தில் நடைபெற்றது.
மகாத்மா காந்தி பிறந்த தினமாகிய அக்டோபர் 02 ஆம் திகதி சர்வதேச அகிம்சை தினமாக ஐக்கியநாடுகளின் பொதுச்சபையால் 2007 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தினம் உலகளாவிய நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று மகாத்மா காந்தியின் 147 ஆவது ஜெயந்தி தினம் ஆகும்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முக்கியஸ்தர்கள் மங்கலவிளக்கேற்றியதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி விரும்பிப்படிக்கும் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பஜனைப்பாடல் இசைக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் உபதலைவருமாகிய பேராசிரியர் எஸ். மோகனதாஸ் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் தலைமையுரை ஆற்றினார்.
சிறப்பு நிகழ்வாக தமிழ்நாடு கோயம்புத்தூரில் இருந்து வருகை தந்த பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் உரை இடம்பெற்றது. “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் ” என்ற பொருளில் உரையாற்றிய அவர் அன்புதான் மனிதனில் உள்ள அக வெளிச்சம் அந்த வெளிச்சத்தை இலகுவில் பெறலாம். ஒரு நன்றி, ஒரு வணக்கம் என்கின்ற வார்த்தைகள் அன்பை மலரச் செய்யப் போதுமானவை. சிறு புன்முறுவல் ஒன்றே அன்பை உருவாக்கும் சக்தி கொண்டத என்றார்.
தொடர்ந்து காந்தியம் இதழ் வெளியீடு இடம்பெற்றது. இதழுக்கான வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார். இதழை துணைத்தூதர் வெளியிட்டு வைக்கப் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
நிகழ்வில் வீணை ஆசிரியர் கோ. விதுஷா குழுவினரின் வீணைக்கச்சேரி, இசையாசிரியர் வாசஸ்பதி ரஜீந்திரனின் மாணவர்கள் வழங்கிய இசைக்கச்சேரி என்பன இடம்பெற்றன. அகில இலங்கை காந்தி சேவா சங்கத் தலைவர் என். சிவகரன் நன்றியுரை ஆற்றினார்.
காந்தீயம் இதழ் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவருகின்றது. இடையிடையே சில தளர்ச்சிகள் ஏற்பட்டாலும் இதன் வெளியீட்டை தற்போதும் தொடர்வது பெருமைக்குரியதே. காந்தியம் இதழின் ஆசிரியராக எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
dsc_0003 dsc_0011 dsc_0012 dsc_0013 dsc_0016 dsc_0027 dsc_0030 dsc_0035 dsc_0068 dsc_0073
படங்கள் –  ஐ.சிவசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com